தன்னார்வலர்கள் முயற்சியில் பள்ளியில் தூய்மைப் பணி

தன்னார்வலர் வழிகாட்டுதலுடன் பள்ளி கழிப்பறைகளை தூய்மையாக வைத்துக்கொள்கின்றனர் பாலஜங்கமனஅள்ளி பள்ளி மாணவியர்.


தன்னார்வலர் வழிகாட்டுதலுடன் பள்ளி கழிப்பறைகளை தூய்மையாக வைத்துக்கொள்கின்றனர் பாலஜங்கமனஅள்ளி பள்ளி மாணவியர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமன அள்ளி கிராமத்தில் கடந்த 1967, செப்.7-ஆம் தேதி ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் பாலஜங்கமனஅள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 
இந்த நிலையில் ஆரம்பப் பள்ளியாக இருந்த இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாகவும், பின்பு கடந்த 2013-இல் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில் 70 மாணவர்கள், 70 மாணவியர் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இப் பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு தற்போது வறண்டுபோனது. இதனால், பள்ளி மாணவ, மாணவியர் தேவைகளுக்கு தண்ணீர் இன்றி சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. நிகழாண்டு பள்ளி திறக்கப்பட்ட பின்பும் இதே நிலை நீடித்து வருகிறது. இதனால், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை தண்ணீர் இல்லாமலேயே மாணவியர் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு, பயன்படுத்துவதால், சுத்தமின்றி கிருமிகள் பரவி தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு மாணவியர் உள்ளாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஜெயமீனா, பள்ளி மாணவியரின் நலன் கருதி, பெற்றோர் சிலருடன் பள்ளி நிர்வாகத்திடம் கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் குறித்து அறிவுறுத்தினர். இருப்பினும், பள்ளியில் தண்ணீர் இல்லாதாது, கழிப்பறைகளை சுத்திகரிக்க என தனியாக ஆள்கள் நியமிக்கப்படவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, 4 முதல் 5 பெற்றோர் ஒன்று கூடி வெளியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து கழிப்பறைகளை சுத்திகரிக்கவும், இதுதொடர்பாக மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்ததற்கு பள்ளி நிர்வாகம், மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இசைவு தெரிவித்தது. 
இதையடுத்து, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மாணவியரின் பெற்றோர் கிராமத்திலிருந்து தண்ணீர் எடுத்துவந்து கழிப்பறைகளில் ஊற்றி பெற்றோரே தூய்மைப்படுத்தினர். இதன்பின்பு ஆர்வமுள்ள மாணவியருக்கு கழிப்பறைகளை குறைந்த தண்ணீர் மூலம் தூய்மையாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகள் கற்றுத்தரப்பட்டன. இதனையறிந்த, மாணவியர் கடந்த சில நாள்களாக எவ்வித சிரமமுமின்றி தங்களது கழிப்பறைகளை அவர்களே, பள்ளிக்கு வெளியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்கின்றனர். இதனால், தாங்கள் தற்போது உடல் உபாதைகள், ஏனைய சிரமங்கள் ஏதுமின்றி புத்துணர்வோடு இருப்பதாக மாணவியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தன்னார்வலர் ஜெயமீனா கூறியது: பாலஜங்கமனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் எனது மகள் தற்போது 6-ஆம் வகுப்பில் நிகழ் கல்வியாண்டில் சேர்க்கப்பட்டார். பள்ளியில் வகுப்பு சென்று வந்த அவருக்கு கழிப்பறை பயன்படுத்த முடியால் சிரமம் ஏற்பட்டது. இதேபோல, ஏனைய மாணவியரும் சிமரத்திற்குள்ளானது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் மாணவியருக்கு, தற்போதுள்ள வறட்சியின் காரணமாக நீர் சிக்கனத்தை கவனத்தில் கொண்டு, குறைந்த தண்ணீரால் கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து பயிற்சி அளித்துள்ளோம். 
மேலும், கழிப்பறைகளில் கிருமிகளை தவிர்க்க, ரசாயன பயன்பாடின்றி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களின் தோல் மற்றும் வெல்லத்துடன் தண்ணீரில் ஒருவாரம் ஊறவைத்து இயற்காயான அமிலம் தயாரித்து, அதனை பயன்படுத்தி தற்போது பள்ளி கழிப்பறைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் மாணவியருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இது குறித்து வழிகாட்டுதலின் பேரில் பள்ளி மாணவியர் தன்னார்வத்துடன் முன் வந்து, கழிப்பறைகள் சுத்தமாக வைத்து பயன்படுத்தி வருகின்றனர்
என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com