புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மனு அளிப்பு
By தருமபுரி / கிருஷ்ணகிரி, | Published On : 30th July 2019 09:23 AM | Last Updated : 30th July 2019 09:23 AM | அ+அ அ- |

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து கிறிஸ்தவ சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தருமபுரி சமூக சேவை மையம் சார்பில் அளித்த மனு: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை சிறுபான்மையினரின் உரிமைகளுக்கும், நலனுக்கும் எதிராக அமைந்துள்ளது. பெரும்பான்மை இனவாதத்தை உள்ளிடக்கியுள்ளது. மேலும், கல்வியை பெரும் சுமையாகவும், வியாபாரமாகவும் முன்வைப்பதோடு, பொது உரிமைக்கு ஊறு விளைவிக்கிறது. மதவாத சூட்சமங்களை ஆதரித்து, கல்வி கட்டமைப்பை ஒருசார்பாக அதிகாரப்படுத்துகிறது. ஆகவே, இதனைத் திறந்தமனதோடு ஏற்றுக்கொள்ள இயலாது. கிறிஸ்தவ சிறுபான்மை சமுதாயம் இதனை புறக்கணிக்கிறது. எனவே, இது தொடர்பாக திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில்...
புதிய கல்விக் கொள்கை குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட சிறுபான்மையினர் கல்வி கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட சிறுபான்மையினர் கல்வி கூட்டமைப்பினர் செயலாளர் மதலைமுத்து தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவின் விவரம்:
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால், மாநில அரசுகளிடம் உள்ள தொடக்க, இடைநிலை, உயர்நிலைக் கல்வி சார்ந்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன. புதிய கல்விக் கொள்கைகள் மூலம் 5 வயதுக்குப் பதிலாக 3 வயதில் தொடக்கக் கல்வி கட்டாயமாகிறது. இதனால், வளரும் குழந்தைகள் பாதிக்கப்படுவர்.
தமிழகத்தில் அதிகம் படிக்காத சம்ஸ்கிருத மொழிக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு இந்தியா முழுவதும் ஒரே தகுதித் தேர்வை முடித்தாலும், 8-ஆம் வகுப்புக்கு மேல் அடித்தட்டு மக்களால் கல்வி கற்க இயலாது. இதன் மூலம், அவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படும். எட்டாம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்கள் 13 வயதிலேயே தொழில் கற்க செல்ல வேண்டிய நிலை உருவாகும்.
மேலும், தகுதித் தேர்வுக்கு அனுப்ப பெற்றோர்கள் செலவு செய்ய வேண்டும். இதனால், ஏழை மாணவர்கள் கல்வி கற்பது கனவாகப் போகும். 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள இடைநிலைக் கல்வியில் 9 செமஸ்டர்கள், கல்லூரியில் சேர இந்தியா முழுவதும் தகுதித் தேர்வு, பல்கலைக்கழகங்கள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்படும் போன்ற அறிவிப்புகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
தொடக்கக் ககல்வி முதல் உயர்கல்வி நிலை வரை தனியார்மயமாகவும், கல்விச் சாலைகள் தனியார் நிறுவனங்களாக மாறவும் வாய்ப்புள்ளது. இனிமேல், உயர்கல்வி அனைவருக்கும் சாத்தியமில்லாத சூழல் ஏற்படும். இதன் மூலம் தனி மனித உரிமைகளைப் பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.