இயற்கையின் சீற்றத்தால் காணாமல்போன ஏரியை மீட்க கோரிக்கை
By DIN | Published On : 25th June 2019 09:37 AM | Last Updated : 25th June 2019 09:37 AM | அ+அ அ- |

இயற்கை சீற்றத்தால் மறைந்துபோன ஏரியை மீட்டு பாசனக் கால்வாய் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கெண்டேனஅள்ளி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் அளித்த மனுவின் விவரம்: கடந்த சில ஆண்டுகளுக்க முன்பு, இயற்கையின் சீற்றத்தால், சாஸ்திரமூட்லு கிராமத்தின் மலையடிவாரத்தில் இருந்த ஏரியின் கரைகள் உடைந்து தரைமட்டமானது.
கடந்த 1981 - ஆம் ஆண்டு, அந்தப் பகுதியில் ரூ.3 கோடியில் அணை கட்ட திட்டமிடப்பட்டு, பொதுப்பணித் துறையினரால் நில அளவீடும் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, ஏரியின் பகுதியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இயற்கை சீற்றத்தால் மறைந்துபோன ஏரியை புனரமைத்து, மீண்டும் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏரியிலிருந்து வலது புறக் கால்வாய் அமைத்து, சந்தன்கொட்டாய் வரையில் கால்வாய் அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.