திமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்

தருமபுரி மக்களவைத் தொகுதி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகள் இடைத் தேர்தலில்

தருமபுரி மக்களவைத் தொகுதி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகள் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் தடங்கம்
பெ. சுப்பிரமணி எம்.எல்.ஏ தெரிவித்தார்.
அரூர் மற்றும் கடத்தூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் டி.என்.வி எஸ்.செந்தில்குமார், சட்டப் பேரவைத் தொகுதிகள் இடைத் தேர்தல் வேட்பாளர்கள் ஆ. மணி (பாப்பிரெட்டிப்பட்டி), செ. கிருஷ்ணகுமார் (அரூர்) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து, திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ. சுப்பிரமணி எம்எல்ஏ பேசியது:
 திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்கள் ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து, நதி நீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக தேர்தல் அறிக்கை குறித்து வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் செய்து வாக்குகளை சேகரிக்க வேண்டும். இடைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ். செந்தில்குமார் பேசியதாவது: தருமபுரி நகரில் எனது வீடு உள்ளது. எனவே, தருமபுரி தொகுதி மக்கள் எப்போதும் என்னை சந்தித்துக் குறைகளைத் தெரிவிக்கலாம். அதேபோல்,  மக்கள் பிரச்னைகளை தீர்க்க கிராமங்கள்தோறும் நேரிடையாக வந்து களப் பணிகளை மேற்கொள்வேன்.
திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பான தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கடத்தூர் மற்றும் அரூரில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் இடைத் தேர்தல் வேட்பாளர்கள் ஆ. மணி, செ. கிருஷ்ணகுமார்,  தேர்தல் பொறுப்பாளர்கள் பார். இளங்கோவன், தாமரைச்செல்வன்,  பென்னாகரம் எல்எல்ஏ இன்பசேகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com