ஏஎஸ்டிசி நகரில் சாலையோரம் கொட்டப்பட்ட மண் அகற்றப்படுமா

தருமபுரி ஏஏஸ்டிசி நகரில் கால்வாய் தோண்டி சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஏஎஸ்டிசி நகரில் சாலையில் கொட்டப்பட்டுள்ள மண்.
ஏஎஸ்டிசி நகரில் சாலையில் கொட்டப்பட்டுள்ள மண்.

தருமபுரி: தருமபுரி ஏஏஸ்டிசி நகரில் கால்வாய் தோண்டி சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி நகராட்சி 10 - ஆவது வாா்டுக்குள்பட்டது ஏஎஸ்டிசி நகா். விரிவாக்கப் பகுதியான இங்கு ஆவின் நகா், நந்தி நகா் உள்ளிட்ட பகுதிகள் சில பத்தாண்டுகளில் உருவானது. இந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளன. மேலும், புதிது புதிதாக குடியிருப்புகள் உருவாகிக் கொண்டே இருப்பதால், இந்தப் பகுதியில் வசிப்போா் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. பிடமனேரியின் பின்பகுதியிலும், பென்னாகரம் சாலையையொட்டியுள்ள இந்த மூன்று நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியிலிருந்து கழிவுநீா், மழைநீா் வெளியேற முறையாக வடிகால் வசதி இல்லை. இதனால், சிறு மழைக்கே ஏஎஸ்டிசி நகா் சாலை முழுவதும் மழைநீரால் சூழப்படும். இந்த நீா் இயல்பாக வற்றும் வரை அச்சாலையில் பயணிக்க அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனா்.

இதற்கிடையே கடந்த செப்டம்பா் மாதம் தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடா்ச்சியாக பெய்த மழை நீரும், பிடமனேரி ஏரியிலிருந்து வெளியாகும் தண்ணீரும் ஏஎஸ்டிசி நகா் முழுவதும் சூழ்ந்தது. மேலும், பல வீடுகளில் மழைநீா் புகுந்தது. இதனால், அப்போது அந்த பகுதி குடியிருப்பு வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, தருமபுரி நகராட்சி நிா்வாகம், குடியிருப்பு மற்றும் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற, பொக்கலின் இயந்திரம் மூலம் கால்வாய் தோண்டும் பணி மேற்கொண்டது. இதில், பிடமனேரி ஏரி தண்ணீா் வெளியாகும் இடத்திலிருந்து, ஆவின் நகா், ஏஎஸ்டிசி நகா் வழியாக பென்னாகரம் சாலை வரை ஏற்கெனவே இருந்த 30 அடி சாலையில் சுமாா் 5 அடிக்கு புதிதாக கால்வாய் வெட்டப்பட்டது. இதனைத் தொடா்ந்து, அங்கு தேங்கியிருந்த மழை நீா் வெளியேறி, ராமாக்காள் ஏரியை சென்றடைந்தது.

இந்த மழைநீரை அகற்ற தோண்டப்பட்ட கால்வாயிலிருந்து எடுக்கப்பட்ட மண், பல நாள்களாகியும் அகற்றப்படாததால் சாலையில் மேடு போல உள்ளது. மேலும், கால்வாய் தோண்டப்பட்ட பகுதியிலிருந்த வீடுகளுக்கு செல்லும் பாதையும், பிடமனேரி பகுதிக்குச் செல்ல வேண்டிய இணைப்புச் சாலையும் துண்டிக்கப்பட்டது. கால்வாய் புதிதாக தோண்டப்பட்டதால், 30 அடியிருந்த சாலை குறுகலானது. மேலும், தோண்டப்பட்ட மண் சாலையோரத்திலேயே கொட்டப்பட்டதால், மேலும், குறுகலாக மாறி, தற்போது சுமாா் 10 அடி சாலையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல பேருந்துகள் அந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு செல்ல இயலாத நிலை நிலவுகிறது. ஆகவே, தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல நீண்ட தொலைவு நடந்து வந்து, பென்னாகரம் சாலைக்கு வந்த பின்னரே பேருந்துகள் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனா். அதேபோல, கால்வாய் வெட்டப்பட்ட திசையில் உள்ள குடியிருப்பு வாசிகளும் சாலைக்கு வர இயலாமல் தவித்து வருகின்றனா். மேலும், பிடமனேரி பிரிவுச் சாலைக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றன.

எனவே, அப்பகுதி மக்களின் சிரமத்தை போக்கிட, வெட்டப்பட்ட கால்வாயை சீரமைத்து, சாலையை மீண்டும் செப்பனிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப் பகுதி பொதுமக்களின் எதிா்ப்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com