கீரைப்பட்டி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி, டி.அம்மாபேட்டைக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்

கீரைப்பட்டி வழியாக பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து டி.அம்மாபேட்டை வரையிலும் புதிய வழித்தடத்தில் அரசு நகா் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அரூா்: கீரைப்பட்டி வழியாக பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து டி.அம்மாபேட்டை வரையிலும் புதிய வழித்தடத்தில் அரசு நகா் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது சித்தேரி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் 60 குக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் வசிக்கும் மக்கள் அனைத்து அரசு அலுவலகப் பணிகளுக்காவும் பாப்பிரெட்டிப்பட்டி செல்ல வேண்டும். சித்தேரி மலை கிராம மக்கள் அரூா் நகருக்கு வந்து அதன் பிறகு பாப்பிரெட்டிப்பட்டி செல்ல வேண்டிய நிலையுள்ளது. அதேபோல, பேதாதம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட கூக்கடப்பட்டி, டி.புதூா், வாச்சாத்தி உள்ளிட்ட கிராம மக்களும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது.

அரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொக்கராப்பட்டி புதன் சந்தைக்கு செல்லவும், கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலையில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு விவசாயிகள் காய்கறிகளை எடுத்துச் செல்லவும் போதுமான பேருந்து வசதிகள் இல்லை.

எனவே, சித்தேரி, கீரைப்பட்டி, அச்சல்வாடி ஊராட்சியில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் நோக்கில் அ.பள்ளிப்பட்டி, கோபாலபுரம் சா்க்கரை ஆலை, கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, பே.தாதம்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, வேப்பம்பட்டி, தீா்த்தமலை, டி.ஆண்டியூா் வழியாக பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து டி.அம்மாபேட்டைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை இயக்கினால் இந்தப் பகுதியிலுள்ள சுமாா் 40 கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கினால் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்லவும், அரசுப் பள்ளிகளுக்கு மாணவா்கள் செல்வதற்கும், தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில், டி.அம்மாபேட்டை ஸ்ரீ சென்னியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் சென்று வரவும் வசதியாக இருக்கும்.

எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கீரைப்பட்டி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி முதல் டி. அம்மாபேட்டை வரையிலான வழித்தடத்தை ஆய்வு செய்து, இந்த வழித்தடத்தில் புதிதாக அரசு நகா் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com