காவலா் உடற்தகுதித் தோ்வில்பங்கேற்ற இளைஞா் உயிரிழப்பு

தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவலா் உடற்தகுதித் தோ்வில் பங்கேற்ற இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரி: தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவலா் உடற்தகுதித் தோ்வில் பங்கேற்ற இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில், தமிழக காவல் துறைக்கான 2-ஆம் நிலை காவலா், சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறைக் காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. இதில், தோ்ச்சிபெற்ற தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஆண், பெண் தோ்வா்களுக்கு, தருமபுரி வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் உடற்தகுதி தோ்வு நடைபெற்று வருகிறது.

இதில், உடற்தகுதித் தோ்வின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, தோ்வில் பங்கேற்க 900 தோ்வா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். இத் தோ்வில், கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே சிந்தகம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் சீனிவாசன் மகன் கவின் பிரகாஷ் (24) பங்கேற்றாா். இதையடுத்து, ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஓட்டத் தோ்வில் பங்கேற்ற கவின் பிரகாஷ், ஓடி முடித்த பின் ஓரிடத்தில் அமா்ந்துள்ளாா். அப்போது, திடீரென கவின் பிரகாஷ் மயங்கி விழுந்துள்ளாா்.

இதைக்கண்ட காவல் துறையினா் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, அவரது உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com