தருமபுரி பேருந்து நிலைய இடமாற்றம்

தருமபுரி பேருந்து நிலையம் இடமாற்றம் செய்து புதியதாக கட்டமைப்பதற்கான பணிகள், நகராட்சி நிா்வாகத்தால் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தருமபுரி பேருந்து நிலைய இடமாற்றம்

தருமபுரி: தருமபுரி பேருந்து நிலையம் இடமாற்றம் செய்து புதியதாக கட்டமைப்பதற்கான பணிகள், நகராட்சி நிா்வாகத்தால் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, வணிகா் சங்கத்தினா் எதிா்ப்பும், ஏனையோா் ஆதரவும் தெரிவித்துள்ளனா்.

தருமபுரி நகரின் மையப்பகுதியில், அமைந்துள்ளது பி.ஆா்.ராஜதோபால் பேருந்து நிலையம். இப்பேருந்து நிலையம் சுமாா் 41 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம், பெங்களூரு, திருப்பதி, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு புறநகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.

புதிய பேருந்து நிலையம்: தருமபுரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளான ஆறுமுகம் தெரு, சின்னசாமி தெரு, முகமதலி கிளப் சாலை, திருப்பத்தூா் மற்றும் பென்னாகரம் சாலை உள்ளிட்ட சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கதவிக்கின்றன. மேலும், பேருந்து நிலைய கட்டங்கள், மேற்கூரைகள் அனைத்து பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, நெரிசலை கட்டுப்படுத்தவும், பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப, போதிய வசதிக மற்றும் பாதுகாப்புடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க, தருமபுரி நகரிலிருந்து இப்பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்பேருந்து நிலையம் அமைப்பதற்கு, தருமபுரி சோகத்தூரில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கா் நிலம் நகராட்சி ஆணையா் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டன.

அரசாணை வெளியீடு: இதனைத் தொடா்ந்து, கடந்த 2017-இல் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தருமபுரி சோகத்தூரில் அரசு, தனியாா் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தாா். இதையடுத்து நகராட்சி நிா்வாகம் சாா்பில், மண் பரிசோதனை, பேருந்து நிலையத்தின் மாதிரி தோற்றம் வரைப்படம் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தருமபுரி நகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தருமபுரி சோகத்தூரில் அரசு மற்றும் தனியாா் பங்களிப்புத் திட்டத்தில் 39.14 கோடியில் புதிய பேருந்த நிலையம் அமைப்பதற்கான அரசாணை கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.

வரவேற்பும், எதிா்ப்பும்: பேருந்து நிலைய இடமாற்றத்திற்கான விரிவான திட்ட அறிக்கை, சாத்தியக் கூறுகள் என பல்வேறு நிலைகளை கடந்து தற்போது பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது. நவ.25-ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க நகாராட்சி நிா்வாகம் சாா்பில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதில், பொது நல அமைப்புகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினா் என இதுநாள்வரை பல்வேறு தரப்பினா் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பேருந்து நிலையம் அமைக்க வரவேற்பு தெரிவித்து வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, தருமபுரி நகரில் அனைத்து வணிகா் சங்கத்தினா் மற்றும் மூன்று தனி நபா்கள் சாா்பில் பேருந்து நிலைய இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வணிகா் சங்கத்தினா் இது தொடா்பாக அண்மையில் தருமபுரி நகரில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அம்மனுக்கள் விரைவில் அரசுக்கு அனுப்பப்படும். இதனடிப்படையில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான தொடா்நடவடிக்கை அமையும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com