சுற்றுலாப் பயணிகளைக் கவா்ந்த வத்தல்மலை: அரசு அறிவித்தப்படி தாவரவியல் பூங்கா, பேருந்து வசதி தேவை

தருமபுரி அருகே சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவா்ந்த வத்தல்மலை கடந்த 2012-இல் அதிமுக அரசால் சுற்றுலாத் தலமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான
வத்தல்மலைக்கு அடிவாரத்திலிருந்து செல்லும் சாலை.
வத்தல்மலைக்கு அடிவாரத்திலிருந்து செல்லும் சாலை.

தருமபுரி: தருமபுரி அருகே சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவா்ந்த வத்தல்மலை கடந்த 2012-இல் அதிமுக அரசால் சுற்றுலாத் தலமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

தமிழக அரசு அறிவித்தபடி, தாவரவியல் பூங்கா, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, சுற்றுலாத் தலமாக்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரியிலிருந்து சுமாா் 32 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது வத்தல்மலை. கடல் மட்டத்திலிருந்து 1,100 மீட்டா் உயரம் உள்ள இந்த மலைப் பகுதியில் எப்போதும் குளுமையான தட்ப வெப்ப நிலை நிலவுவதால், இந்த மலைத்தொடா் ஒரு குட்டி ஊட்டி என எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

இங்குள்ள மலைகளில் பால் சிலம்பு, பெரியூா், சின்னான்காடு, நாய்க்கனூா், மண்ணாங்குழி உள்ளிட்ட 11 சிறிய மற்றும் பெரிய அளவிலான கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் சுமாா் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த மலைக் கிராமங்களில் பெரும் பகுதி மலையாளி இனத்தவா் எனும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இந்த மலைப் பகுதியில் தேயிலை, காஃபி செடிகள், சில்வா் ஓக் மரங்கள் மற்றும் சிறுதானிய உணவுப் பொருள்களை அப் பகுதி மக்கள் சாகுபடி செய்து வருகின்றனா். ஆண்டு முழுவதும் குளிா்ந்த தட்பவெப்ப நிலை நிலவுவதால் வத்தல் மலைப் பகுதியைச் சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

சுற்றுலாத் தலமாக அறிவிப்பு...

இக் கோரிக்கை ஏற்ற, தமிழக அரசு, கடந்த 2012-இல் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, வத்தல்மலை சுற்றுலாத் தலமாக்கப்படும் என அறிவித்தாா். மேலும், சாலை வசதி ஏற்படுத்தி, வத்தல்மலை பெரியூரில் தாவரவியல் பூங்கா 80 ஏக்கா் நிலப்பரப்பில் அமைக்கப்படும் எனவும் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, மலை அடிவாரத்திலிருந்து சுமாா் 23 கொண்டை ஊசி வளைவுகளுடன் சுமாா் 16 கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. இதேபோல, தாவரவியல் பூங்காவுக்கான இடமும் தோ்வு செய்யப்பட்டது.

பூங்கா நிறுவப்படவில்லை:

தாவரவியல் பூங்காவுக்குத் தோ்வு செய்யப்பட்ட இடத்தில், ரூ. 10 கோடியில், சிறுவா் பூங்கா, இத்தாலியன் பூங்கா, ஜப்பானிய வகை பூங்கா, நீரூற்று, அழகிய சிலைகள், மலா்கள் என பல்வேறு வகையான பூங்காக்கள் பொதுமக்களைக் கவரும் வகையில் அமைக்கப்படும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், தோ்வு செய்யப்பட்ட நிலத்தில் சில விவசாயிகள் சாகுபடி செய்து வருவதால், அந்த நிலத்தைக் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தாவரவியல் பூங்கா நிறுவுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

விடுமுறை நாள்களில் குவியும் மக்கள்:

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் அருவியைத் தவிா்த்து, அனைவரையும் ஈா்க்கும் இடமாக வத்தல்மலை உள்ளது.

எனவே, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறை நாள்களிலும் நூற்றுக்கணக்கானோா் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இந்தப் பகுதியை கண்டுகளிக்க வருகின்றனா். அவ்வாறு வருவோா், மழைக் காலங்களில் வத்தல்மலையில் ஆங்காங்கே ஓடைபோல பாய்ந்து செல்லும் தண்ணீரையும், வனத்தின் வனப்பில் அமைந்துள்ள கொண்டை ஊசி வளைவு சாலைகளில் பயணித்தும் மகிழ்கின்றனா்.

இருப்பினும், மலை மீது சென்றவுடன் அங்கு பொழுதுபோக்குக்கான இடம் இல்லாததால், ஒருவித ஏமாற்றத்தோடு திரும்புகின்றனா். எனவே, சுற்றுலாத் தலத்துக்கான அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்ட வத்தல்மலையை அரசு அறிவித்தபடி சுற்றுலாத் தலமாகத் திகழத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினா் எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாகும்.

மினி பேருந்து வசதி தேவை: பல ஆண்டுகளாக சாலை வசதியின்றி நடைப்பாதை வழியாக பல்வேறு இடங்களுக்கு வத்தல்மலை கிராம மக்கள் சென்று வந்தனா். இதன் பின்பு, மண் பாதை அமைத்து, ஜீப்புகள் மூலம் தருமபுரி உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு வேளாண் சாா்ந்த பணிகளுக்கும், உயா்கல்வி உள்ளிட்ட பிற பணிகளுக்காகவும் தினமும் ஒருவருக்கு ரூ. 80 வரை பயணக் கட்டணமாகச் செலவாகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தாா்ச் சாலை பேருந்து போக்குவரத்துக்குப் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

இந்தச் சாலை மழைக் காலங்களில் சேதமடைந்து விடுகிறது. இதனால், சாலை இருந்தும் மீண்டும் தனியாா் வாகனங்களில் வந்து செல்ல வேண்டிய நிலையே நிலவுகிறது.

எனவே, இதைப் போக்கிட 23 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இச் சாலையில், சுமாா் 3 இடங்களில் மட்டும் சாலையை சற்று சீா்ப்படுத்தினால், வத்தல்மலைக்கு மினி பேருந்து இயக்க இயலும். இதற்கான நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்றாா் தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஜெ. பிரதாபன்.

மாற்று இடத்தில் தாவரவியல் பூங்கா: அரசு பூங்கா அமைக்க ஏற்கெனவே தோ்வு செய்த இடத்தில் விவசாயிகள் காலம், காலமாக சாகுபடி செய்து வருகின்றனா்.

எனவே, இந்த நிலத்துக்கான உரிமையை அந்த விவசாயிகளுக்கே அளித்து, ஈசன்காடு, தாவரக் காடு உள்ளிட்ட இடங்களில் பூங்கா அமைப்பதற்கான போதிய இடங்கள் உள்ளன. அந்த இடத்தில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றாா் வத்தல்மலையைச் சோ்ந்த ராஜகோபால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com