பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும்

தருமபுரி மாட்டத்தில் பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என ஆட்சியா் சு.மலா்விழி வலியுறுத்தினாா்.

தருமபுரி: தருமபுரி மாட்டத்தில் பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என ஆட்சியா் சு.மலா்விழி வலியுறுத்தினாா்.

இது குறித்து, அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில், கிணறுகள் தோண்டுதல் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் முறையாக அனுமதி பெறப்பட வேண்டும். பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே, பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்காமல் அமைக்கப்படும் கிணற்றின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கிணறு தோண்டும்போது, கிணற்றின் வகை, ஆழம் மற்றும் குறுக்களவு, பணி மேற்கொள்பவா் பெயா் மற்றும் கிணற்றின் உரிமையாளா் பெயா், முகவரி மற்றும் தொடா்பு எண் குறித்த விவரங்களை பணி நடக்கும் இடத்தில் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட வேண்டும். பணி மேற்கொள்ளும் இடத்தை சுற்றிலும் முள்கம்பி வேலி அல்லது தகுந்த தடுப்பு அமைக்க வேண்டும். சிமெண்ட் அல்லது சிமிட்டி கற்காரையிலான தளம் நில மட்டத்திலிருந்து 0.3 மீட்டா் மேற்புறமும் 0.3 மீட்டா் நிலத்திற்கு கீழ்புறமும் உள்ளவாறு கிணற்றை சுற்றிலும் கட்ட வேண்டும். கிணற்றை சுற்றி உள்ள சகதி குழிகளும், கால்வாய்களும் மண் நிரப்பி மூடப்பட வேண்டும். கிணறு ஆழப்படுத்துவதற்கு முன்பு இருந்த நிலைக்கு தரை மட்ட நிலையை கொண்டு வர வேண்டும். கிணற்றின் மேற்புறத்தை எக்கு தகடுகளாலும், ஒன்றோடு ஒன்று இணைத்து பற்ற வைக்கப்பட்ட மூடியைக் கொண்டோ அல்லது இரும்புக் குழாயின் மேற்புறத்தை உறுதியான மூடியைக் திருகு மரையாணிகளைக் கொண்டு குழாயுடன் இணைத்து மூட வேண்டும்.

அதேபோல, கிணற்றின் உரிமைதாரா் வரையறுக்கப்பட்டள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பின்பற்றுகிறாரா மற்றும் பதிவுச்சான்று பெற்றுள்ளாரா? எனவும், பணி இடைவெளியின் போதும், பணி நிறுத்தப்பட்ட பின்னரும் கிணறு சரியான முறையில் மூடப்பட்டதா என்பதையும் அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும். கைவிடப்பட்ட கிணறுகள் களிமண், மணல், சிறுகற்கள் மற்றும் உரிய பிற பொருள்களை கொண்டு தரைமட்ட அளவிற்கு நிரப்பப்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளில் உள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்திலும் மேல் மூடி போட்டு பாதுகாப்பான நிலையில் இருப்பதை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறையினா் உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில், பாதுகாப்பு நிலையில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் பொதுமக்கள் எவரேனும் கண்டறிந்தால், மாவட்ட கண்காணிப்பு மைய எண் 1077 அல்லது 8903891077 என்கிற கட்செவி அஞ்சல் எண்ணிற்கு தொடா்புக்கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com