காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்

ஒகேனக்கல் காவிரி ஆற்றிலிருந்து மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றிலிருந்து மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே பங்குநத்தம் ஊராட்சிக்குள்பட்ட திப்பட்டியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளையொட்டி தூர்வாரும் பணி அக் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இப் பணிகளை தொடக்கிவைத்த அக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது: எங்களது கட்சியின் நிறுவனர் ராமதாஸின் 80-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, நீர்நிலைகளை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் மழை காலங்களில் வெள்ளநீர் மிகையாக சென்று கடலில் கலக்கிறது. இதைத் தவிர்க்க, காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளில் நிரப்பும் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். 
மேலும், மக்களவைத் தேர்தலில் போது அன்புமணி தேர்தல் வாக்குறுதியாக இதனை அறிவித்தார். இத் திட்டம் தொடர்பாக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று முதல்வரிடம் அளித்தோம். ஆனால், தேர்தலில் மக்கள் எங்களுக்கு வெற்றியளிக்கவில்லை என்றாலும், இத் திட்டம் நிறைவேற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். தமிழக அரசு இதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதேபோல, தும்பலஅள்ளி-எண்ணேகொல்புதூர் இணைப்புக் கால்வாய் திட்டம், புலிகரை-ஜர்த்தலாவ் கால்வாய் நீட்டிப்புத் திட்டப் பணிகளை தொடங்க வேண்டும். 
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதை வரவேற்கிறோம். இதில், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் விடுபடாமல் அனைத்தும் தூர்வார வேண்டும். ஒகேனக்கல் அருகே ராசிமணல் பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மேக்கேதாட்டுவில் அணைக்கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்துவதோடு கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார். 
இதில் மாநிலத் துணை பொதுச் செயலர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், உழவர் பேரியக்க மாநிலச் செயலர் இல.வேலுசாமி, மாநிலத் துணைத் தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாவட்டச் செயலர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com