370-வது சட்டப் பிரிவை நீக்கியதால் ஜம்மு-காஷ்மீரில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா

370-வது சட்டப் பிரிவை நீக்கியதால்,  ஜம்மு - காஷ்மீரில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று பா.ஜ.க.  தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

370-வது சட்டப் பிரிவை நீக்கியதால்,  ஜம்மு - காஷ்மீரில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று பா.ஜ.க.  தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
தருமபுரியில் பா.ஜ.க. சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி, மக்கள் சந்திப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இக் கூட்டத்தில் பங்கேற்ற ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:  ஜம்மு -காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன.  இவ் விவகாரத்தில் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைக்க,  மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்.  370-வது சட்டப்பிரிவு நீக்கம் குறித்து தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கூறும் கருத்து,  பார்வையற்றவர்கள் யானையைத் தொட்டுப்பார்த்து கருத்துக் கூறுவது போல உள்ளது.  ஜம்மு -காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு அமலில் இருந்தபோது,  அங்கு மலைவாழ் மக்கள்,  பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது.  இதர பிற்பட்ட சமூகத்தினருக்கு 2 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமையில் அநீதி இழைக்கப்பட்டது.  ஆனால்,  தற்போது சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு,  ஜம்மு- காஷ்மீரில், நாட்டின் பிற பகுதிகளில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு முறை,  அங்கும் பின்பற்றப்படுகிறது.  பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தடுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம்,  சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.  ஆகவே தி.மு.க. இதற்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.  ஆனால்,  மாறாக சமூக நீதி பறிபோனதாகக் கூறி திமுக பொய் பிரசாரம் செய்கிறது.  ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை என்கிற திட்டம் வரவேற்கத்தக்கது.  ஒருவர் பல்வேறு அட்டைகள் வைத்திருப்பதற்குப் பதிலாக ஒரே அட்டை என்பது சிரமத்தைப் போக்கும்.
  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்த பெரு நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அறிவிப்புகளால் பொருளாதாரம் தேக்க நிலையிலிருந்து எழுச்சி பெறும்.  அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியக் கூட்டத்தில் அவருக்குக் கிடைத்த வரவேற்பை இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறோம்.  திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்துள்ளனர்.  அரசியல் கட்சித் தலைவர்கள் சிறையில் உள்ள அவர்களது கட்சியினரைச் சந்திப்பது இயல்பு.  ஆனால், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிகாரிகள் தவறிழைத்திருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறும் கருத்து, 2 ஜி  வழக்குக்கும் பொருந்துமா என்பது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com