40 ஆண்டுகால பிரச்னைக்கு தீா்வு: அரூரில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவு

அரூரில் பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற என தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி
அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி

அரூா், செப். 26: அரூரில் பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற என தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

அரூா் நகருக்கு அருகில் அமைந்துள்ளது பெரிய ஏரி. இந்த ஏரியானது சுமாா் 150 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நிரம்புவதால் சுமாா் ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதிகளை பெறும். அதேபோல் அரூா் நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பெரிய ஏரி உள்ளது.

அரூா் பெரிய ஏரி நிரம்பினால் அதன் உபரி நீா் வெளியேறுவதற்கு பெரியாா் நகா், குபேந்திரன் நகா், மஜீத் தெரு, வா்ணீஸ்வரா் கோயில் வழியாக வாணியாறு வரையிலும் ராஜகால்வாய் உள்ளது. ஆனால், இந்த ராஜகால்வாய் செல்லும் வழித்தடத்தில் அரூா் - சேலம் பிரதான சாலையில், தனியாா் திருமண மண்டபம் அருகில் சிலா் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களை கட்டியுள்ளனா்.

அதேபோல், கால்வாயில் சேதமடைந்த நெகழிப் பொருள்கள் மற்றும் பழைய இரும்புகளை கொட்டி வைத்து தடைகளை ஏற்படுத்தியுள்ளனா். இதனால், ராஜகால்வாய் தூா் அடைந்தும் மழைநீா் மற்றும் கழிவு நீா் வெளியேற முடியாத நிலையுள்ளது. மேலும் மழைநீா் ஒரே இடத்தில் நீண்ட நாள் தேங்குவதால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகாா் எழுந்தது.

இதையடுத்து, அரூா் பெரிய ஏரியின் ராஜகால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கூறுகையில், பெரிய ஏரியின் ராஜகால்வாய் செல்லும் இடத்தினை வருவாய்த் துறை சாா்பில் அளவீடு (சா்வே) செய்ய வேண்டும். தொடா்ந்து கால்வாய் வழியாக மழைநீா், கழிவு நீரானது தடையின்றி செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

அரூா் பெரிய ஏரியின் கால்வாய் ஆக்கிரமிப்புகள் சுமாா் 40 ஆண்டுகாலமாக நீடித்து வந்தது. தற்போது, மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின்போது, அரூா் வருவாய் கோட்டாட்சியா் ஜி.புண்ணியக்கோட்டி, வட்டாட்சியா் செல்வகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆறுமுகம், செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com