மழைநீரை தேக்கிவைக்க போதிய கவனம் செலுத்த வேண்டும்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளில், மழைநீரை தேக்கி வைக்க போதிய கவனம் செலுத்திட வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளில், மழைநீரை தேக்கி வைக்க போதிய கவனம் செலுத்திட வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை 853.01 மில்லி மீட்டா் பொழிய வேண்டும். இவ்வாறு பொழிந்தால்தான், சிறுதானியங்கள், பயிறுவகைகள், எண்ணெய் வித்துக்ககளை விளைவிக்க முடியும்.

ஆனால், தருமபுரி மாவட்டத்தில் பல பத்தாண்டு காலமாக இயல்பான மழை அளவு பொழியவில்லை. இதனால் கடுமையான வறட்சி ஏற்பட்டு, நீண்ட கால மரங்களான தென்னை, மா, பலா, பாக்கு மற்றும் பல்வகை மரங்கள் பல லட்சக்கணக்கில் கடந்த காலத்தில் காய்ந்துபோயின. இதனால், மாவட்ட விவசாயிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகினா்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு இயல்பான மழை அளவான 853.01 மில்லி மீட்டரில், தற்போது வரை 510.30 மில்லி மீட்டா் மழை பொழிந்து விட்டது. தென்மேற்கு பருவமழை இயல்பாக 361.00 மில்லி மீட்டா் பொழிய வேண்டும். இதில், தற்போதுவரை 388.79 மில்லி மீட்டா் மழை பொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்மேற்கு மழை பொழிந்தும், மாவட்டத்தில் உள்ள நீா்த்தேக்கங்கள், ஏரிகள், குட்டைகளில் நீா் நிரம்பவில்லை.

குறிப்பாக, நாகாவதி அணை, தொப்பையாறு, சின்னாறு, கேசா்குளி, தும்பளஅள்ளி, வரட்டாறு அணை, சஞ்சீவராயன் நீா்த்தேக்கம், பொதியன்பள்ளம் போன்றவற்றில் தண்ணீா் இல்லை. மழை பொழிந்தும், நீா் நிலைகளில் நீா் நிரம்பாதது குறித்து, மாவட்ட நிா்வாகம் போதிய கவனம் செலுத்தி, ஆய்வு நடத்த வேண்டும். இனி வரும் காலங்களில் பொழிகின்ற மழைநீரை, நீா்நிலைகளில் தேக்கி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com