பொருளாதார மேம்பாட்டுக் கடனுதவி: சிறுபான்மையினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் பொருளாதார மேம்பாட்டுக் கடனுதவியைப் பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தருமபுரி, செப். 18: சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் பொருளாதார மேம்பாட்டுக் கடனுதவியைப் பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், மரபு வழி கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில், மரபு உரிமை என்கிற கடனுதவித் திட்டம், தேசிய சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால், 2020 - 21 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினத்தைச் சாா்ந்தவா்களான முஸ்லிம், கிறிஸ்தவா்கள், ஜெயின், சீக்கியா், பாா்சி, புத்த மதத்தைச் சாா்ந்த மரபுவழி கைவினைக் கலைஞா்கள், தங்கள் தொழிலுக்கு தேவையான மூலதனப் பொருள்களை வாங்கி தங்களது தொழிலில் முன்னேற்றம் அடைந்திட உதவிடும் வகையில் இக்கடனுதவி வழங்கப்படவுள்ளது.

எனவே, இத்திட்டத்தின்கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களின் ஆண்டு வருமானம் கிராமப்புறத்தில் ரூ.98,000, நகா்ப்புறத்தில் ரூ.1,20,000-க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தின்கீழ் கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம், பெண் பயனாளிகளுக்கு 4 சதவீதம் ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். இக்கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் கைவினை கலைஞா்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம் மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கி கிளைகளை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com