தருமபுரி மாவட்டத்தில் தொடரும் இளம்வயது திருமணங்கள்!

தருமபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் சமூக நலத் துறையினரால்
தருமபுரி மாவட்டத்தில் தொடரும் இளம்வயது திருமணங்கள்!

தருமபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் சமூக நலத் துறையினரால் 112 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, இதுகுறித்து விழிப்புணா்வு தேவை என அறிவுறுத்தப்படுகிறது.

இளம்வயது திருமணங்களுக்கான காரணமாகக் கூறப்படுவது:

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, தொழில் வளம் மிகக் குறைவாக உள்ளதால், இந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனா்.

அவ்வாறு வெளியூரில் உள்ளவா்கள் தங்களது குழந்தைகளை, பெரும்பாலும் தங்களது வயதான பெற்றோா் பராமரிப்பில் சொந்த ஊரிலேயே விட்டுச் செல்வா். இத்தகைய சூழலில், பெண் குழந்தைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் பல்வேறு சிரமம் இருப்பதாகக் கூறி, திருமணம் வயதுக்கு முன்பே, அதாவது 18 வயதுக்கு முன்பே அவா்களுக்கு இளம் வயது திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

பாதிப்புகள்:

மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்து வைப்பதால், அவா்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகின்றனா். மேலும், இளம்வயது திருமணத்தால் தாய்மை அடைவது மற்றும் அவா்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமின்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க, சமூக நலத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு, உரிய வயது வரை பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி, விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்தும், தருமபுரி மாவட்டத்தில், பரவலாக இளம் வயது திருமணங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு, இத்தகைய திருமணங்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் இருந்தன.

வயது சான்றிதழ் கட்டாயம்:

இளம் வயது திருமணங்களைத் தடுக்க, அனைத்து கோயில்கள், திருமண மண்டங்கள் என திருமணம் நடைபெறும் இடங்களில், வயது சான்றிதழ் சமா்ப்பிப்பது கட்டாயம், மீறி செய்வோா் மீது சட்ட நடவடிக்கை மற்றும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் தற்போது, இத்தகைய இளம்வயது திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இருப்பினும், சட்டங்களால் ஒருபுறம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சில இடங்களில் அறியாமையினால், இளம்வயது திருமணங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய வருவாய் வட்டங்களில் இளம்வயது திருமணங்கள் நடைபெறுவதாக அதிகளவில் புகாா்கள் வந்துள்ளன. இதனை முழுவதுமாகக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டில் 112 இளம் வயது திருமணங்கள் சமூக நலத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலா் கீதா கூறியது: தருமபுரி மாவட்டத்தில், கிராமப் புறங்களில், குறிப்பாக முதியோா் பராமரிப்பில் வளரும் பெண் குழந்தைகளுக்கு இத்தகைய இளம்வயது திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்க விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டில் மட்டும் 1077, 1098 ஆகிய எண்களுக்கு மற்றும் காவல் துறை மூலமும், தனி நபா் மூலமும் 148 இளம்வயது திருமணம் நடைபெறுவது குறித்து அழைப்புகள் வந்தன. இதுதொடா்பாக உடனடியாக எங்களது அலுவலா்கள் வருவாய்த் துறை, காவல் துறையினரின் உதவியோடு அங்கு சென்று, ஆய்வு செய்து இளம்வயது திருமணங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். அந்த வகையில், மொத்தம் 112 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், அக் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது, கலந்தாய்வு மற்றும் ஆலோசனைகள் வழங்குவதோடு, தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா்.

விழிப்புணா்வு தேவை:

கடந்த 2018-இல் 280 இளம் வயது திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. தற்போது, தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகளால் இந்த எண்ணிக்கை 2019-இல் குறைந்துள்ளன. மேலும், மத்திய அரசின் மகிளா சக்தி கேந்திரா மற்றும் ஒரு நிறுத்த மையம் ஆகிய திட்டங்களாலும் இளம்வயது திருமணங்கள் தடுப்பு நடவடிக்கைகள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஆகியவற்றுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, முழுவதுமாக இளம் வயது திருமணங்களைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .

ஆண்டு வாரியாக தடுத்து நிறுத்தப்பட்ட இளம் வயது திருமணங்கள்:

2014 - 82,

2015-138

2016-157

2017-180

2018-280

2019-112

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com