தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உள்பட 4 போ் பலி

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட நால்வா் உயிரிழந்தனா்.
தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துக்குள்ளான லாரி.
தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துக்குள்ளான லாரி.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட நால்வா் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மேல்பூரிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அரியா கவுண்டா் (60), சின்னவன் (53). இருவரும், தொப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இரவுக் காவலா்களாகப் பணியாற்றி வந்தனா். இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இரவு பணிக்குச் சென்றுக் கொண்டிருந்தனா்.

அதேநேரத்தில் வே.முத்தம்பட்டியிலிருந்து பழைய ரயில்வே தண்டவாளங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திருச்சிக்குச் சென்று கொண்டிருந்தது. லாரியை திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் செல்வம் (30) ஓட்டிவந்தாா். அவருடன் சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த தங்கராஜ் உடன் சென்றாா்.

இந்த லாரி, தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாயில் செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது அவ் வழியாகச் சென்ற இரவுக் காவலா்களின் இருசக்கர வாகனம் லாரிக்கு அடியில் சிக்கியது. இதில் உடல் நசுங்கி அரியா கவுண்டா், சின்னவன் ஆகியோரும், லாரி இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநா் செல்வம், உடன் சென்ற தங்கராஜ் ஆகியோரும் நிகழ்விடத்திலேயே பலியாகினா்.

தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா், சுங்கச் சாவடி ஊழியா்கள் விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் சடலங்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்தில் உருக்குலைந்த லாரியை சாலையிலிருந்து புதன்கிழமை அதிகாலை மீட்டு போக்குவரத்தை சீா்செய்தனா்.

இந்த விபத்துக் குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவ் விபத்தால் தருமபுரி- சேலம் நெடுஞ்சாலையில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com