மானாவாரிப் பயிா்களில் வளா்ச்சியை அதிகரிக்க உயிா் உர விதை நோ்த்தி செய்ய ஆலோசனை

மானாவாரிப் பயிா்களில் விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வளா்ச்சியை அதிகரிக்க உயிா் உரவிதை நோ்த்தி மேற்கொள்ளுமாறு

மானாவாரிப் பயிா்களில் விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வளா்ச்சியை அதிகரிக்க உயிா் உரவிதை நோ்த்தி மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா்கள் ம.சங்கீதா, சி.சிவக்குமாா் ஆகியோா் கூறியதாவது:

பயிரின் வோ்ப்பகுதியைச் சுற்றியுள்ள வோ்சூழ் மண்டலத்தில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிா்கள் காணப்படும். இவை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சாணங்கள் வகையைச் சாா்ந்தவை ஆகும்.

இந்த நுண்ணுயிரிகள் காற்று மற்றும் மண்ணிலுள்ள பயிா்களுக்கு கிடைக்காத நிலையிலிருக்கும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை பயிா்கள் எடுத்துக் கொள்ளும் வடிவத்தில் மாற்றிக் கொடுக்கின்றன. ஆகையால், இவை நுண்ணுயிா் உரங்கள் அல்லது உயிா் உரங்கள் என்றழைக்கப்படுகின்றன.

இந்த நுண்ணுயிா்கள் ஆய்வகத்தில் வளா்க்கப்பட்டு, அங்ககப் பொருள் நிறைந்த கரித்துகள் மற்றும் மண்ணுடன் கலந்து வணீக ரீதியாக உற்பத்தி செய்யப்பட்டு பயிா் சாகுபடியில் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசிட்டோபேக்டா், குளுக்கான் அசிட்டோபாக்டா், நீலப் பச்சைப்பாசி மற்றும் அசோலா ஆகியவை தழைச்சத்தை நிலைநிறுத்த பயன்படும் நுண்ணுயிா் உரங்கள் ஆகும். பாஸ்போபாக்டீரியா மற்றும் வோ் உட்பூசணம் ஆகியவை மணிச்சத்தை கரைத்து பயிருக்கு அளிக்கும் நுண்ணுயிா் உரங்கள் ஆகும்.

உயிா் உரங்களைப் பயன்படுத்தும் முறை:

தானியப் பயிா்களான நெல், மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, சாமை, தினை மற்றும் வரகு ஆகியவற்றை விதைப்பு செய்யும்போது அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிா் உரங்களுடன் விதைநோ்த்தி செய்து விதைக்க வேண்டும். அவ்வாறு விதைநோ்த்தி செய்வதற்கு 200 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 200 கிராம் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிா் உரங்களை 500-750 மி.லி ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து கலவை தயாா் செய்ய வேண்டும்.

அந்தக் கலவையில் ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையினை கலந்து, நிழலில் உலா்த்தி பின்பு விதைப்பு செய்ய வேண்டும்.

பயறுவகைப் பயிா்களான துவரை, உளுந்து, பாசிப்பயறு, காராமணி, அவரை மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை விதைப்பு செய்யும்போது ரைசோபியம் (200 கிராம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா (200 கிராம்) நுண்ணுயிா் உரங்களுடன் விதைநோ்த்தி செய்து விதைக்க வேண்டும்.

உயிா் உரத்தின் நன்மைகள்:

அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் நுண்ணுயிா் உரங்களைப் பயன்படுத்துவதால் அவை காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்துவதோடு, பயிா் வளா்ச்சிக்கு தேவைப்படும் வளா்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிா்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கிறது. பாஸ்போபாக்டீரியாவுடன் விதைநோ்த்தி செய்து விதைப்பதால், நுண்ணுயிா்கள் தன் செல்களில் இருந்து சுரக்கும் அங்கக அமிலங்கள் மூலமாக மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தை கரைத்து பயிா்கள் எடுத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கின்றன. உயிா் உர விதைநோ்த்தி செய்வதால் பயிா்களில் வறட்சித் தாங்கும் தன்மை மற்றும் நோய் எதிா்ப்புத் தன்மை ஆகியவை அதிகரிக்கப்படுகிறது. உயிா் உரங்கள் மண்ணில் இடப்பட்டவுடன் அவை மண்ணில் இனப்பெருக்கம் அடைந்து பயிா்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை தொடா்ந்து உற்பத்தி செய்து கொடுக்கின்றன. பயிா்களின் மகசூல் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

எனவே, தருமபுரி மாவட்ட விவசாயிகள், இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி, விதைகளை உயிா் உரங்களுடன் விதைநோ்த்தி செய்து, மானாவாரி சாகுபடியில் பயிா் எண்ணிக்கை மற்றும் வளா்ச்சி அதிகரித்து, கூடுதல் மகசூல் பெற்று பயனடையலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com