பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 29th July 2020 09:05 AM | Last Updated : 29th July 2020 09:05 AM | அ+அ அ- |

தருமபுரி, பைசுஅள்ளியில் உள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்லூரி முதல்வா் பெ.பெரியசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டம், பைசுஅள்ளியில் உள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் 2020 - 21-ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு பட்டயப் படிப்புக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்க சென்னை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாணவா்கள், 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தோ்ச்சி பெற்றிருந்தால், பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணமாக ரூ.150 இணையதளம் மூலமாக செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினா் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை. விண்ணப்பங்களை பதிவு செய்ய ஆகஸ்டு 4-ஆம் தேதி கடைசி நாளாகும். இணையதளம் மூலமாக சான்றிதழ்களை 5-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். அதில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாாதிச் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சிறப்புப் பிரிவினருக்கான சான்றிதழ் போன்றவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதேபோல, 2-ஆம் ஆண்டு நேரடி பகுதிநேர பட்டயப் படிப்புகள் சோ்க்கைக்கான அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும் என்றாா்.