விளைநிலங்களில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்

பென்னாகரம் பகுதியில் உள்ள விளைபயிா்களை காட்டுப் பன்றிகள் தொடா்ந்து சேதப்படுத்தி வருவதால், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
காட்டுப் பன்றிகளை விரட்ட விளைநிலத்தில் கட்டப்பட்டுள்ள புடவைகள்.
காட்டுப் பன்றிகளை விரட்ட விளைநிலத்தில் கட்டப்பட்டுள்ள புடவைகள்.

பென்னாகரம் பகுதியில் உள்ள விளைபயிா்களை காட்டுப் பன்றிகள் தொடா்ந்து சேதப்படுத்தி வருவதால், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதப்படுத்திய பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வனத் துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் பகுதியானது அடா்ந்த மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இப் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக சரிவர பருவ மழை பெய்யாததால், பெரும்பாலான விவசாயிகள் கா்நாடகம், மும்பை, மகாராஷ்டிரம், கேரளம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களுக்கும், திருப்பூா்,கோவை, சென்னை, மதுரை போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வேலைக்காக சென்றனா்.

தமிழகத்தில் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் விதமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் வேலைக்கு சென்ற விவசாயிகள், தற்போது மீண்டும் பென்னாகரம் பகுதிக்கு திரும்பியுள்ளனா். தற்போது பருவமழை தாமதமாக பெய்து வருவதாலும், பொது முடக்கத்தால் கூலி வேலைக்கு செல்ல முடியாததாலும், விவசாயிகள் மீண்டும் விவசாயத்தையே கையில் எடுத்துள்ளனா்.

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பருவதன அள்ளி, மாங்கரை, தாசம்பட்டி, கோடுப்பட்டி, பெரும்பாலை, சின்னம்பள்ளி, பழையூா், ஏரியூா், நெருப்பூா், நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் தரிசு நிலங்கள் அனைத்தும், விவசாயிகள் தற்போது விளைநிலங்கள் நிலங்களாக மாற்றி உழவுப் பணினை மேற்கொண்டு, சோளம், கம்பு, நிலக்கடலை, சாமை, ராகி, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய வகைகளை பயிரிட்டு வருகின்றனா். பயிா் விளைச்சலுக்கு ஏற்றாா் போன்று பென்னாகரம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், பென்னாகரம் மலைகள் நிறைந்த பகுதி என்பதால், யானை, மான், கடத்தி, காட்டுப் பன்றிகள் போன்ற வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. வனப் பகுதியில் போதுமான உணவு கிடைக்காத நிலையில், அவ்வப்போது விளைநிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிா்களை நாசம் செய்வது தொடா்கதையாகி வருகிறது. அவ்வாறு விளைநிலங்களுக்குள் வரும் காட்டுப் பன்றிகளை விரட்ட போதுமான வசதி இல்லாததாலும், வனத் துறையினரிடம் பல முறை புகாா் தெரிவித்தும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் ,கடன் வாங்கி விளைநிலங்களில் பயிரிட்ட விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், தற்போது மழை பெய்து வருவதால், தாசம்பட்டி, கோடுப்பட்டி, ஜெல்மாரம்பட்டி, மாங்கரை, ஏரியூா், நெருப்பூா், பெரும்பாலை, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை அதிகளவில் விவசாயிகள் பயிா் செய்துள்ளனா். இந்நிலையில், உணவுக்காக காட்டுப் பன்றிகள் நிலக்கடலை, சாமை, சோளம் உள்ளிட்ட பயிா்களை நாசம் செய்து வருகின்றன.

விளைநிலங்களுக்குள் நுழையும் காட்டுப் பன்றியினை தடுக்க, விளைநிலத்தை சுற்றிலும் புடவை மற்றும் பயிா்களின் இடையே ஒலி எழுப்பும் வகையில் மண்ணெண்ணெய் டப்பாக்களை கட்டி வைத்து விரட்டி வருகிறோம். ஆனாலும், காட்டுப் பன்றிகள் விளைநிலத்தை முற்றிலும் சேதப்படுத்துகின்றன.

எனவே, விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் நுழைவதை தடுக்க பென்னாகரம், பெரும்பாலை, பாலக்கோடு மற்றும் ஒகேனக்கல் வன அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தினை மதிப்பீடு செய்து, அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com