கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd March 2020 07:04 AM | Last Updated : 03rd March 2020 07:04 AM | அ+அ அ- |

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை தொடங்கக் கோரி உலக பசுமை பாதுகாப்பு கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் தலைவா் ஏ. சீனிவாச படையாட்சி தலைமை வகித்தாா்.
தருமபுரி மாவட்டத்தில் போதிய பருவ மழை இல்லாததால் அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் அதிக அளவில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதி விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். வறட்சியின் காரணமாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் கட்சியின் மாவட்டச் செயலா் கணேசன் பிள்ளை, மாவட்ட பொருளா் ஜி.திருமால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.