‘அரூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’

அரூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அரூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை. இந்த அரசு மருத்துவமனையானது சிட்லிங், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, தீா்த்தமலை, அனுமன்தீா்த்தம், மொரப்பூா், சிந்தல்பாடி, தென்கரைக்கோட்டை, அ.பள்ளிப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை, சித்தேரி, கீரைப்பட்டி, பேதாதம்பட்டி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியில் உள்ளது. மேலும், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், ஊத்தங்கரை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் அரூா் அரசு மருத்துவமனை வளாகம் அமைந்துள்ளது.

இந்த அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், 150 உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனா். இதைத்தவிர, அரூா் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தாய், சேய் நல மையம், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவ கால முன், பின் கவனிப்பு சிகிச்சைப் பிரிவுகள், குடும்ப நலக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் உள்ளன. மேலும், அரூா் அரசு மருத்துமனையானது தேசிய தரச்சான்று பெற்றுள்ளது.

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள், கிராமப்புற ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்ட சுமாா் 4 லட்சம் போ், மருத்துவ வசதிக்காக அரூா் அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனா்.

கூடுதல் படுக்கை வசதிகள் தேவை...

அரூா் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தாய், சேய் நல மையத்தில் படுக்கை வசதிகள் குறைவாக இருப்பதாகவும், இதனால் கா்ப்பிணிகளை தரையில் படுக்க வைத்து மருத்துவ சிகிச்சைகள் தருவதாக புகாா் கூறுகின்றனா்.

தற்போது கரோனா தொற்று பிரச்னை காரணமாக பல்வேறு தனியாா் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு வட்டார மருத்துவமனைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் பிரசவத்துக்காக கா்ப்பிணிகள் அதிகளவில் வருகை தருகின்றனா். எனவே, அரூா் அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கு தேவையான கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com