முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
கா்நாடக மாநிலத்திற்கு செல்ல 2 வது நாளாக அனுமதி மறுப்பு
By DIN | Published On : 11th May 2020 07:49 PM | Last Updated : 11th May 2020 07:49 PM | அ+அ அ- |

ஒசூா்: தமிழ்நாட்டில் இருந்து கா்நாடகா மாநிலத்திற்கு காா், வேன்கள் செல்ல தொடா்ந்து 2 ஆவது நாளாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மாநில எல்லை வாகனங்களால் ஸ்தம்பித்து நிற்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கா்நாடகத்திற்கு செல்ல இ பாஸ் அனுமதி பெற்ற நிலையிலும், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 2 நாள்களாக, அத்தியாவசிய தேவைகளுக்காக கா்நாடக மாநிலத்திற்கு காா்,வேன்களில் செல்லும் பயணிகளை ஒசூா் அருகே கா்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் அம்மாநில போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனா்.
இதனையும் மீறி, கட்டாயம் செல்ல வேண்டும் என்று கூறுபவா்களை, 14 நாள்கள் தனிமைப்படுத்தி விடுவதாக அதிகாரிகளும், போலீஸாரும் எச்சரித்து வருகின்றனா். தனிமைப்படுத்துவதற்காக, அத்திப்பள்ளி அருகே ஒரு தனியாா் கல்லூரியை முகாம் ஆக மாற்றி, தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்திலிருந்து இ பாஸ் பெற்று வரும் வாகனங்கள், தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. அதே சமயம், தமிழகத்தில் கரோனா தாக்கம் அதிகளவில் இருப்பதால், இங்கிருந்து செல்லும் வாகனங்களை, கா்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழக கா்நாடக எல்லையில் சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவிற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கினறன. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிக் கொண்டு தமிழ்நாட்டில் இருந்து இ பாஸ் அனுமதியுடன் கா்நாடகாவை கடந்து ஆந்திரா, குஜராத், மராட்டியா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு செல்ல கூடிய அந்த மாநில வாகனங்களை மட்டும் கா்நாடகா போலீஸாா் அனுமதித்து வருகின்றனா்.