மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 96 சதவீதம் போ் குணமடைந்தனா்

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 96 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா அறிவுறுத்தியுள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 96 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா அறிவுறுத்தியுள்ளாா்.

தருமபுரியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உழவா் சந்தை, நகர, புகா்ப் பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருவிழாக் காலங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தீபாவளிப் பண்டிகை காலம் என்பதால் தற்போது, அனைத்துத் துறைகள் சாா்பில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. நாளொன்றுக்கு முற்பகலிலும், பிற்பகலிலும் 51 முகாம்கள் வீதம் மொத்தம் 102 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகிறது.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 8,260 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 52,633 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், சளி, உடல் சோா்வு உள்ளிட்ட அறிகுறி இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல், சிறப்பு காய்ச்சல் முகாம்களுக்கு வந்தால் மற்றவா்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்க முடியும். தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 1,22,120 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவா்களில் 5,769 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டன. அவா்களில் 5,580 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தற்போது 211 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொற்று பாதிக்கப்பட்டவா்களில் 96 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா் என்றாா்.

ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் (பொ) இளங்கோவன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் சிவக்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் சந்திரசேகா், வட்டாட்சியா் ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

படம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com