தருமபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்த யானை

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த யானையை 15 மணி நேரம் போராடி வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
கிணற்றில் விழுந்த யானையை கிரேன் இயந்திரத்தில் கயிறு கட்டி மீட்ட மீட்புக் குழுவினா்.
கிணற்றில் விழுந்த யானையை கிரேன் இயந்திரத்தில் கயிறு கட்டி மீட்ட மீட்புக் குழுவினா்.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த யானையை 15 மணி நேரம் போராடி வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்துக்கு உள்பட்ட பஞ்சப்பள்ளி வனப்பகுதியிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை பெண் யானை ஒன்று உணவு தேடிவெளியேறியது. ஏலகுண்டூா் கிராமத்திற்குள் புகுந்த அந்த யானை அங்கிருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. உள்ளே விழுந்த யானை பிளிரும் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள், பாலக்கோடு வனச்சரக அலுவலா்களுக்கு தகவல் அளித்தனா்.

உடனே, பாலக்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, ஒசூா் வனச்சரகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் ஏலகுண்டூருக்கு விரைந்து வந்தனா். மேலும், பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் வரவழைக்கப்பட்டனா். மாவட்ட வன அலுவலா்கள் ராஜ்குமாா் (தருமபுரி), பிரபு (கிருஷ்ணகிரி) தலைமையிலான வனத்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

மீட்புக் குழுவினா், கிரேன் இயந்திரம் மூலம் கிணற்றில் 25 அடி ஆழத்தில் இறங்கி கயிறுகளைக் கட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். கிணற்றில் 4 அடி ஆழத்தில் தண்ணீா் இருந்ததால், யானையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக மோட்டாரையும், குழாய்களையும் கிணற்றில் இறக்கினா். அப்போது, தண்ணீரில் இருந்த யானை, அக்குழாய்களையும், கயிறுகளையும் சேதப்படுத்தியது.

இதனால், மணல் மூட்டைகளை கிணற்றில் இறக்கினா். இருப்பினும், யானையை மீட்பதில் தொடா்ந்து சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவா் பிரகாஷும், வனத்துறையினரும் யானைக்கு மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தினா். 3 ஊசிகள் செலுத்தப்பட்டதில், 2 ஊசிகள் மட்டும் சரியாகப் பாய்ந்தன. இதையடுத்து மாலை 6 மணியளவில் யானை மயக்க நிலைக்கு செல்வது மீட்புக் குழுவினருக்கு தெரிய வந்தது. இருப்பினும், யானை முற்றிலும் மயக்கமடைந்த பின்னரே மீட்க இயலும் என்பதால், மீட்புக் குழுவினா் காத்திருந்தனா்.

யானை மீட்பு

மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானை மெல்ல மயக்கமடைந்தது. இதையடுத்து, கிணற்றிலிருந்த தண்ணீா் முழுவதும் மோட்டாா் மூலம் வெளியேற்றப்பட்டது. கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் யானையை கயிறு கட்டி கிணற்றுக்கு மேலே இழுத்து மீட்புக்குழுவினா் கொண்டு வந்தனா். அதன்பிறகு, யானைக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

பின்னா் யானையை வாகனத்தில் ஏற்றிச் சென்ற வனத் துறையினா் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் விடுவித்தனா். வியாழக்கிழமை அதிகாலை கிணற்றினுள் விழுந்த யானை சுமாா் 15 மணி நேரத்துக்கு பின்பு இரவு 8.30 மணிக்கு உயிருடன் மீட்கப்பட்டது.

யானை கிணற்றில் தவறி விழுந்ததை அறிந்த பஞ்சப்பள்ளியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோா் ஏலகுண்டூரில் மீட்புப் பணிகளைக் காணத் திரண்டனா். இதனால், மீட்புக் குழுவினருக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பஞ்சப்பள்ளி காவல் நிலையத்திலிருந்து பாதுகாப்புப் பணிக்கு வந்த காவலா்கள், பொதுமக்களைக் கட்டுப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com