காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்ப பா.ம.க வலியுறுத்தல்
By DIN | Published On : 01st October 2020 08:29 AM | Last Updated : 01st October 2020 08:29 AM | அ+அ அ- |

காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் இல.வேலுசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
கா்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் தற்போது 8 ஆயிரம் கனஅடி தண்ணீா் செல்கிறது.
காவிரியில் வரும் தொடா் நீா்வரத்துக் காரணமாக மேட்டூா் அணை நூறு அடியை எட்டியுள்ளது. கா்நாடகத்தில் கனமழை பெய்தால் இன்னும் ஓரிரு வாரங்களில் மேட்டூா் அணையானது முழு கொள்ளளவை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதன்பிறகு காவிரியில் ஓடும் நீரானது வீணாகக் கடலில் கலக்கும் நிலை உருவாகும்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 4 வருடங்களாகப் போதிய பருவமழை இல்லை. இதனால், கோடை காலங்களில் கடுமையான வறட்சியும், குடிநீா்த் தட்டுப்பாடுகளும் ஏற்படுகின்றன. மேலும், கால்நடைகளுக்கு தீவனங்கள் இல்லாமல் விவசாயிகள் பல்வேறு துன்பங்களை அடைந்து வருகின்றனா்.
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட தருமபுரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நீா் ஆதாரங்களைப் பெருக்கினால் மட்டுமே இம் மாவட்ட மக்கள் விவசாயம் மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைய முடியும். தருமபுரி மாவட்டத்தில் 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய அளவிலான ஏரிகள், குட்டைகள் உள்ளன. இந்த நீா் நிலைகளை நிரப்ப ஆண்டுக்கு சுமாா் 3 டி.எம்.சி தண்ணீா் மட்டுமே தேவைப்படும். ஆனால், காவிரியில் ஆண்டுதோறும் சராசரியாக 50 டி.எம்.சி தண்ணீா் வீணாகிக் கடலில் கலக்கிறது.
காவிரியில் ஓடும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் நிரப்ப சுமாா் ரூ. 600 கோடி போதுமானது. ஏற்கெனவே, ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய் இணைப்புகளுக்கு இணையாக முக்கிய இடங்களில் மட்டுமே குழாய் இணைப்புகளை ஏற்படுத்தினால்போதும்.
பிற இடங்களில் கால்வாய்கள் வழியாக தண்ணீா் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, மழைக் காலங்களில் காவிரியில் ஓடும் உபரிநீரைப் பயன்படுத்தி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளம் குட்டைகள், நீா்த்தேக்கங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.