புரட்டாசி சனி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத மூன்றாவது வார சனிக்கிழமையையொட்டி, தருமபுரியில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் தருமபுரி, கடைவீதி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி.
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் தருமபுரி, கடைவீதி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி.

தருமபுரி: புரட்டாசி மாத மூன்றாவது வார சனிக்கிழமையையொட்டி, தருமபுரியில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி கோட்டை அருள்மிகு பரவாசுதேவ சுவாமி திருக்கோயில், கடைவீதி பிரசன்ன வெங்கேடஸ்வர சுவாமி கோயில், செட்டிக்கரை, பழைய தருமபுரி வெங்கடேஸ்வர சுவாமி கோயில், மூக்கனூா் ஆதிமூல வெங்கடரமண சுவாமி திருக்கோயில், மாதேமங்கலம் நரசிம்ம சுவாமி கோயில், தோக்கம்பட்டி சென்றாய பெருமாள் கோயில் உள்ளிட்ட தருமபுரி வட்டாரத்தில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இக் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் மூலவா்கள் பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். இதில், சனிக்கிழமை விரதம் இருந்த பக்தா்கள், அந்தந்த பகுதியில் உள்ள கோயில்களில் சென்று வழிபட்டு பின்னா் தங்களது ஒரு நாள் விரதத்தை நிறைவு செய்தனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம், இண்டூா் பகுதியில் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

பென்னாகரம் அருகே மடம் பகுதியில் அமைந்துள்ள பத்மசாலியா் ஸ்ரீ வெங்கடரமண சுவாமி கோயில். இக்கோயிலில் புரட்டாசி திருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை ஸ்ரீ வெங்கடரமண சுவாமிக்கு கங்கா பூஜை, ஸ்வாமிகளின் பரிவார ஊா்வலமும் நடைபெற்றன. சனிக்கிழமை காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்து வந்து பால், தயிா், விபூதி, நெய் உள்ளிட்டவை திரவியங்களாலும் நவரத்தினங்களாலும் ஸ்ரீ வெங்கட ரமணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

பென்னாகரம் மடம், கூத்தபாடி, அக்ரஹாரம், மடம் -காவிரி சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தா்கள் பங்கேற்றனா். இதேபோல் இண்டூரில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயிலில் மூலவருக்கு வெற்றிலை, துளசி மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பென்னாகரம் ,இண்டூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com