பென்னாகரத்தில் தொடா் மழை: நெல் சாகுபடியில் ஆா்வம் காட்டும் விவசாயிகள்

பென்னாகரம் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்துள்ளதால், வழக்கத்தைக் காட்டிலும்

பென்னாகரம் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்துள்ளதால், வழக்கத்தைக் காட்டிலும் அதிகப் பரப்பளவில் நெல் சாகுபடியில் ஈடுபடுவதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

பென்னாகரம் பகுதி அடா்ந்த மலைகள் சூழ்ந்ததாகும். பெரும்பாலும் மேட்டுப்பாங்கான நிலங்களாக உள்ளதால், பருவ மழையைப் பொறுத்தே விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முன்பு பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோளம், கம்பு, ராகி போன்ற சிறுதானிய வகைகளையே விவசாயிகள் பயிா் செய்து வந்தனா்.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழையும் பொய்த்ததால் பென்னாகரம் சுற்றுப்பகுதியிலுள்ள விளைநிலங்கள் தரிசாக மாறின.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் பரவலாக மழை பெய்ததால் பென்னாகரம், தாசம்பட்டி, பெரும்பாலை, சின்னம்பள்ளி, ஏரியூா், நாகமரை பகுதிகளில் உள்ள விவசாயிகள் நிலக்கடலை, ராகி, சோளம் போன்ற பயிா்களை விளைவித்து ஓரளவு அதிக விளைச்சலையும் பெற்றுள்ளனா். தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் பென்னாகரம் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் இங்குள்ள பல ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனால் திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து காணப்படுகிறது.

போதிய அளவில் ஏரி, கிணறுகளில் பாசனத்துக்கு நீா் இருப்பு உள்ளதால் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, தாசம்பட்டி, ஏரியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் நடப்பு பருவத்தில் சம்பா நெல் சாகுபடியில் ஈடுபடுவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இதற்காக, 4 மாதத்தில் அறுவடை செய்யும் வகையில் அமோகா, அம்மன் பி.டி, ஐ.ஆா்-8, ஐ.ஆா்- 18, 20 நெல் ரகங்களின் நாற்றுக்களை நடவு செய்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். தற்போது, வழக்கத்தைக் காட்டிலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா்.

தற்போது அதிக அளவில் விவசாயிகள் நெல் நடவு செய்து வருவதால், நாற்றுகள் கிடைக்காத விவசாயிகள் காரிமங்கலம், காவேரிப்பட்டணம் போன்ற பகுதிகளுக்குச் சென்று நெல் நாற்றுகளை வாங்கி வந்து நடவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். தற்போது, கரோனா பிரச்னையால் பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவா்களும் விவசாயப் பணிகளில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

நீண்ட காலத்துக்குப்பின் நெல் சாகுபடி தீவிரம் பெற்றுள்ளதால் இப்பகுதியைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு தினசரி வேலை கிடைத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com