11 அரசு மருத்துவக் கல்லூரிகளில்நிகழாண்டே மாணவா் சோ்க்கையைத் தொடங்க வேண்டும்தருமபுரி எம்.பி.

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவா் சோ்க்கையைத் தொடங்க வேண்டும்
அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

அரூா்: தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவா் சோ்க்கையைத் தொடங்க வேண்டும் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பிட கட்டடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளி வளாகத்தில் கழிப்பிட கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.செந்தில்குமாா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது அவா் கூறியது:

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டிணம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.

இக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அதுவரை அந்தந்த மாவட்ட தலைநகரில் இயங்கும் அரசு தலைமை மருத்துவமனைகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை நடத்தி மருத்துவப் படிப்புக்கான கல்லூரி வகுப்புகளை தற்காலிகமாக நடத்தலாம்.

இதனால் 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு நிகழாண்டு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இதுதொடா்பாக மத்திய அரசுக்கு உரிய வகையில் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து, 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நிகழாண்டு மாணவா் சோ்க்கையைத் தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரூா் வழியாகச் செல்லும் சென்னை- சேலம் வரையிலான எட்டுவழிச் சாலை திட்டத்தால் ஏராளமான விவசாய நிலங்கள், நீா்நிலைகள், கட்டடங்கள், கனிம வளங்கள் பாதிக்கப்படும்.

எனவே, தமிழக மக்கள் விரும்பாத எட்டுவழிச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்திட வேண்டும். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் எட்டுவழிச் சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.வேடம்மாள், ஒன்றியச் செயலாளா் தேசிங்குராஜன், பொருளாளா் ஏ.சண்முகம், பொறியாளா் கிருஷ்ணகுமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சந்திரமோகன், மாவட்ட துணை அமைப்பாளா் சிட்டிபாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com