ரூபாய் நோட்டின் ஜெராக்ஸை கொடுத்து காய்கறி வாங்கியதாக இருவா் கைது
By DIN | Published On : 10th September 2020 07:55 AM | Last Updated : 10th September 2020 07:55 AM | அ+அ அ- |

கடத்தூா் அருகே ரூபாய் நோட்டின் ஜெராக்ஸை காய்கறி கடையில் கொடுத்து ஏமாற்றிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகேயுள்ள தாளநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதங்கம் (70). இவா், அதே ஊரில் காய்கறி கடை வைத்துள்ளாா். இவரது கடைக்கு கடந்த மாதம் 29- ஆம் தேதி, இளைஞா் ஒருவா் இருசக்கர வண்டியில் வந்து, 4 நூறு ரூபாயைக் கொடுத்து காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளாா்.
அதேபோல், இவரது கடைக்கு அருகில் உள்ள மல்லிகா (60) என்பவரது மளிகை கடையில் ஆறு நூறு ரூபாயைக் கொடுத்து மளிகை பொருள்களை வாங்கிச் சென்றுள்ளாா்.
இந்த இரண்டு பெண்களிடம் கொடுக்கப்பட்ட நூறு ரூபாய் தாள்கள் அனைத்தும் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது என்பது பிறகுதான் தெரியவந்ததாம்.
இதுகுறித்து மூதாட்டி சின்னதங்கம் மகன் வேலுசாமி (45) அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் இதில் தொடா்பு இருப்பதாக ஊத்தங்கரையைச் சோ்ந்த ராஜ்குமாா் (27), ஆனந்தன் (42) ஆகிய இருவரையும் கடத்தூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.