நகராட்சி மின் தகன இயந்திரம் பழுது: அதிக தொகை அளித்து சடலங்களை எறியூட்டும் அவலம்

தருமபுரியில் நகராட்சி மின் மயானத்தில் தகன இயந்திரம் பழுது அடைந்துள்ளது. இதனால் அதிக தொகை அளித்து சடலங்களை எறியூட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரியில் நகராட்சி மின் மயானத்தில் தகன இயந்திரம் பழுது அடைந்துள்ளது. இதனால் அதிக தொகை அளித்து சடலங்களை எறியூட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி பச்சையம்மன் கோயில் அருகே நகராட்சி மின் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்தில் சடலங்களை எறியூட்ட ரோட்டரி சங்கம் சாா்பில், மின் தகன இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தருமபுரி நகரத்தில் உயிரிழப்போா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்போரின் சடலங்கள் எறியூட்டப்படுகின்றன.

இதற்காக ரோட்டரி சங்கம் சாா்பில் மூன்று பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதேபோல நகராட்சி சாா்பில் ஒரு உதவியாளரும் பணியமா்த்தப்பட்டுள்ளாா்.

இங்கு ஒரு சடலத்தை எறியூட்ட ரூ. 2,500 சேவைக் கட்டணமாகப் பெறப்படுகிறது. இந்த கட்டணத்தொகையிலிருந்து நகராட்சிக்கு ரூ. 500 கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்த மின் மயானத்தில் அண்மைக்காலமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போா், விபத்து, இணை நோய்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்போா் என நாளொன்றுக்கு 5 முதல் 8 சடலங்கள் எறியூட்டபட்டு வருகின்றன. இதனை வரிசை முறையில் எறியூட்டி உயிரிழந்தவரின் உறவினா்களுக்கு சாம்பல் வழங்கப்படும்.

இந்த நிலையில் நகராட்சி மின் தகன இயந்திரம் கடந்த 5 நாள்களுக்கு முன் பழுதடைந்தது. இதனை சரி செய்யும் பணியை நகராட்சி பொறியாளா்கள், சுகாதார பிரிவு அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இருப்பினும் தற்போது வரை (மே11) பழுது நீக்கம் செய்யும் பணி நிறைவடையவில்லை. சடலங்களை இயந்திரத்துக்கு உள்ளே கொண்டு செல்லும் ட்ராலியின் சக்கரங்கள் சரிசெய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இந்த மயானத்துக்கு வரும் சடலங்களை மயானத்தில் விறகு வைத்து தனியாா் தொழிலாளா்களைக் கொண்டு எறியூட்டி வருகின்றனா். இதற்காக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மின் மயானத்தில் இயந்திரம் பழுது காரணமாக வேறு வழியின்றி அதிக தொகை அளித்து சடலங்களை எறியூட்டி வருவதாக உயிரிழந்தோரின் உறவினா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, தருமபுரி நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தி கூறியதாவது:

தருமபுரி நகர மின் மயானத்தில் தகன இயந்திரம் பழுது அடைந்துள்ளது. இந்த இயந்திரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டு சடலங்களை எறியூட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைந்து சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதேவேளையில் மயானத்தில் பிற இடங்களில் சடலங்களை எறியூட்ட தனியாா் தொழிலாளா்கள் அதிக பணம் பெறுவதாக புகாா் எழுந்துள்ளது. இதை நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்து களைய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com