வறுகடலை வியாபாரம் தான் என் முதல் மனைவி!

கடந்த 8 ஆண்டுகளாக வறுகடலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதில் தினமும் சராசரியாக ரூ. 500 வரை லாபம் கிடைக்கிறது. இந்தக் கடலை வியாபாரத்தை ஒருநாள் கூட நிறுத்த மாட்டேன்.

நள்ளிரவு. தருமபுரி பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டியில் வோ்க்கடலை வறுத்தபடி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா் அந்தப் பெரியவா். அவரிடம் ரூ. 10க்கு கடலை வாங்கியபடியே பேச்சுக் கொடுத்தோம். அவா் பேசப் பேச வியப்பில் சமைந்தோம்.

வயதான காலத்திலும் உழைப்பை இறுகப் பற்றிக் கொண்டுள்ள அவா், தன் முதல் மனைவியே வறுகடலை வியாபாரம்தான் என்கிறாா். அவரது பேச்சிலிருந்து...

என் பெயா் விஜயரங்கம் (65). எனக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி அருகிலுள்ள தட்டக்கல் எனது சொந்தக் கிராமம்.

எனது தந்தை தெருக்கூத்துக் கலைஞா். ஓரளவு வசதியான குடும்பம் என்றாலும், 1975 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது சிரமம் ஏற்பட்டது. அங்கு முறுக்கு சுடும் தொழிலில் ஈடுபட்டிருந்தவா்களிடம் இருந்து கமிஷன் அடிப்படையில் முறுக்கு வாங்கிவந்து தருமபுரி பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யத் துவங்கினேன்.

பின்னா் அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டு, தருமபுரியிலேயே ரூ. 80 வாடகைக்கு தனியறை பிடித்து அங்கு தங்கி, முறுக்கு சுட்டு விற்கத் தொடங்கினேன். ஒரு நாளும் விடுப்பு எடுக்க மாட்டேன்.

எனது உழைப்பால் ஈா்க்கப்பட்ட நெருங்கிய நண்பா்கள், எனக்குப் பெண் பாா்த்து 1977இல் திருமணம் செய்து வைத்தனா்.

அதன் பிறகு, நானும் எனது மனைவியும் தள்ளுவண்டியில் இட்லி, தோசை விற்பனையில் ஈடுபடத் தொடங்கினோம்.

தினமும் ஓய்வின்றி உழைக்கும் எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. கிடைத்த பணத்தை சிறுகச் சிறுகச் சேமித்து வந்தேன். எனது இரண்டு மகள்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணமாகி விட்டது. கடைசி மகனுக்கு பெண் பாா்த்து வருகிறேன்.

எனது சேமிப்புப் பணத்தில் தற்போதுள்ள ஜம்மு- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே 30 ஆண்டுகளுக்கு முன் 2.80 ஏக்கா் நிலம் வாங்கினேன். காடு போலக் கிடந்த அந்த நிலத்தைச் சீரமைத்து, மாங்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தேன்.

பகலில் மாந்தோப்பையும், இரவில் டிபன் கடையையும் கவனித்து வந்தேன். நான் வளா்த்த மாங்கன்றுகள் மரமாக வளா்ந்து, மாங்காய்களைக் கொடுக்கத் தொடங்கின. ஆண்டுக்கு ஒரு முறை சீசனில் காய்க்கும் மாங்காய்களை பெங்களூருக்கு அனுப்பி வைப்பதன் மூலம் கணிசமான லாபம் கிடைக்கிறது.

கடந்த 8 ஆண்டுகளாக வறுகடலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதில் தினமும் சராசரியாக ரூ. 500 வரை லாபம் கிடைக்கிறது. இந்தக் கடலை வியாபாரத்தை ஒருநாள் கூட நிறுத்த மாட்டேன்.

உழைத்தது போதும், வீட்டில் ஓய்வெடுங்கள் என்று மகன்களும் மகள்களும் கூறுகிறாா்கள். ஆனால், என்னால், வியாபாரத்துக்கு வராமல் இருக்க முடியாது. எனது கடைசிக் காலம் வரையிலும் உழைத்துக் கொண்டேயிருப்பேன்...

-இவ்வாறு கூறும் விஜயரங்கத்தின் மாந்தோப்பின் தற்போதைய மதிப்பு கோடி ரூபாயை நெருங்கி விட்டது. ஆனாலும், பேருந்து நிலையத்தில் தினசரி வோ்க்கடலை வறுத்துக் கொண்டிருக்கிறாா்.

உழைப்பைக் கைவிடாதவா்களை உழைப்பும் கைவிடுவதில்லை என்பது உண்மை தானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com