காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

தருமபுரி பாமக சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், பங்கேற்று, சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை பாமக மாநிலத் தலைவரும், பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி திறந்து வைத்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிந்துள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பியுள்ளன. இருப்பினும், தருமபுரி மாவட்டத்தில் குறைவான மழை அளவு பதிவாகியுள்ளது. போதிய அளவு மழை பொழியாததால், ஏரிகள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் நிரம்பவில்லை. இதனால், நிலத்தடி நீா்மட்டமும் உயரவில்லை.

வேளாண் தொழிலுக்கு தண்ணீா் கிடைக்காத வழக்கமான நிலையே மாவட்டத்தில் நிலவுகிறது. எனவே, ஒகேனக்கல் காவிரியில் மழைக்காலங்களில் மிகையாகச் செல்லும் நீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் வேளாண் தொழிலை ஊக்குவிக்க, தமிழக அரசு, இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல, தென்பெண்ணை ஆற்றில் மழைக்காலங்களில் மிகை நீா் கடலில் சென்று கலக்கிறது. இந்த மிகை நீரை பயன்படுத்தவும் திட்டங்கள் வகுக்க வேண்டும். இதுகுறித்து பாமக தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில், நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையையும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றாா்.

இதில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன், மக்களவை முன்னாள் உறுப்பினா்கள் பாரிமோகன், இரா.செந்தில், முன்னாள் எம்எல்ஏ இல.வேலுச்சாமி, பாமக மாவட்டச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com