கரோனா கால சிறப்பு ஊதியம் வழங்க உள்ளாட்சி பணியாளா்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 13th August 2021 11:57 PM | Last Updated : 13th August 2021 11:57 PM | அ+அ அ- |

கரோனா கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என உள்ளாட்சி பணியாளா்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்ட ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளா் சம்மேளனத்தின் மாவட்டக் குழுக் கூட்டம், மாவட்டத் தலைவா் என்.மனோகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டக்குழு உறுப்பினா் வணங்காமுடி ஆகியோா் பேசினா்.
இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளா்களின் ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். உள்ளாட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். ஓய்வுபெறும் ஊழியா்களுக்கு தாமதமின்றி பணப் பலன்களை வழங்க வேண்டும். ஊரக உள்ளாட்சித் தொழிலாளா்களை முழுநேர தொழிலாளா்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.