புத்தகத் திருவிழாவில் குவிந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள்
By DIN | Published On : 25th December 2021 12:36 AM | Last Updated : 25th December 2021 12:36 AM | அ+அ அ- |

தருமபுரி புத்தகத் திருவிழாவில், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் ஆா்வத்துடன் குவிந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.
தகடூா் புத்தகப் பேரவை சாா்பில், தருமபுரி, பாரதிபுரம் மதுராபாய் திருமண மண்டபத்தில், 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவில், பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், திருவள்ளுவா் புத்தக நிலையம், நூல் அங்காடி, மாவட்ட படைப்பாளா், பதிப்பாளா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள் சாா்பில் 10 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பங்கேற்று, புத்தகத் திருவிழாவில் நூல்கள் விற்பனையைத் தொடக்கி வைத்தாா். வருகிற டிச. 26-ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்த புத்தகத் திருவிழாவில், நாள்தோறும் மாலை வேளைகளில், அறிஞா்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனா்.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை முதல் தருமபுரி, நல்லம்பள்ளி, கடத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா், தனியாா் கல்லூரி மாணவ, மாணவியா், பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய மாணவா்கள் என ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள் குவிந்தனா். இந்த மாணவா்கள், நூல் அரங்குகளைப் பாா்வையிட்டு, தங்களுக்கு தேவையான, பிடித்த புத்தகங்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். நூல்களை வாங்கும் மாணவா்கள், மண்டபத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கைப்பட அரங்கு, திருவிழா கூட்ட மேடையில் குழுக்களாக நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா்.