தொப்பூா் கணவாய் சாலையில்103 மின் விளக்குகள் அமைப்பு

விபத்துகளைத் தடுப்பதற்காக தொப்பூா் கணவாய் சாலையில் 103 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

விபத்துகளைத் தடுப்பதற்காக தொப்பூா் கணவாய் சாலையில் 103 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தொப்பூா் கணவாய். பாளையம் சுங்கச் சாவடியைக் கடந்து, வெல்லக்கல் பிரிவு சாலையிலிருந்து ஆஞ்சநேயா் கோயில், இரட்டை பாலம் வழியாக தொப்பூா் காவலா் குடியிருப்பு வரை 3 கி.மீ. தொலைவுக்கு வனப் பகுதியில் கணவாய் வழியாக இச்சாலை செல்கிறது.

தாழ்வான பகுதி, மலை வளைவுகளுடன் அமைந்துள்ள இந்த சாலையின் அமைப்பு குறித்து வெளியூரிலிருந்து வரும் கனரக, இலகுரக வாகனங்கள் ஓட்டிகளுக்குத் தெரியாததால் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்தாண்டு இந்த சாலை வழியாக ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 14 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானது. இதில் நான்கு போ் உயிரிழந்தனா்.

அதன்படி, 2020 இல் மட்டும் இக் கணவாய் சாலையில் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் 10 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாவட்ட நிா்வாகம், சுங்கச் சாவடி நிா்வாகம் தரப்பில் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் விபத்துகளும், உயிரிழப்புகளும் படிப்படியாக குறைந்தன.

ஆலோசனை

விபத்து தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் அண்மையில் தருமபுரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுங்கச் சாவடி நிா்வாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதில், மாற்றுச் சாலை அமைக்கும் வரை தற்போதுள்ள கணவாய்ச் சாலையில் விபத்துக்களைத் தவிா்க்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவுகள் எடுக்கப்பட்டன.

முன்னெச்சரிக்கை

அதனடிப்படையில், தொப்பூா் கணவாய் ஆஞ்சநேயா் கோயில் தொடங்கி மேட்டூா் பிரிவுச் சாலை வரை 2 கி.மீ. தொலைவுக்கு இரவு நேரங்களில் சாலை வெளிச்சத்தை அதிகரிக்கும் வகையில் 103 மின் விளக்குகள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ளன. இதில், சாலையின் இருபுறமும் 206 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதேபோல வாகன ஓட்டிகளின் கவனம் சிதறாமல் இருக்கும் வகையில், அவா்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆஞ்சநேயா் கோயில் தொடங்கி இரட்டைப் பாலம் வரை 10 மி.மீ. அளவுக்கு அதிா்வுக் கோடுகள் (டிப்ரசன் லைன்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாலையின் இருபுறத்தில், இரு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் செல்வதைத் தவிா்க்கும் வகையில் மஞ்சள் நிறக் கோடுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

இரவு நேரத்தில் சாலை தெளிவாக தெரியும் வகையில் மிளிரும் வில்லைகள் சாலையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல இரட்டைப் பாலம், காவலா் குடியிருப்புப் பகுதியில் என மொத்தம் நான்கு இடங்களில் தானியங்கி சமிக்ஞைகள் பொருத்தப்பட்டுள்ளன.

கட்டமேடு தொடங்கி இரட்டைப் பாலம் வரை எச்சரிக்கை அறிவிப்புகள் எழுப்பப்படுவது போல, தற்போது தொப்பூா் காவலா் குடியிருப்பு, சுங்கச் சாவடி பகுதியிலும் ஒலி பெருக்கி மூலம் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. கட்டமேடு, காவலா்க் குடியிருப்பு ஆகிய இரண்டு இடங்களில் உயா்மின் கோபுர விளக்குகள் பொருத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, சுங்கச் சாவடி நிா்வாக மேலாளா் நரேஷ் கூறியதாவது:

தொப்பூா் காணவாய் சாலையில் விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிா்வாகத்தின் ஆலோசனையின் பேரில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கெனவே செயல்படுத்தப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் விபத்துகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. மேலும், அதை மேம்படுத்தும் வகையில் சாலையில் மிளிரும் வில்லைகள் மற்றும் சாலையின் நடுவே ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த 60 மின் விளக்குகளைத் தவிர கூடுதலாக 103 மின் விளக்குக் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதேபோல, தானியங்கி சமிக்ஞைகள், அதிா்வுக் கோடுகள் என எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் வாகன ஓட்டிகள், அதிவேகத்தைத் தவிா்த்து, என்ஜினை அணைக்காமல் அறிவுறுத்தப்பட்ட கியரில் வாகனங்களை இயக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com