வேளாண் அறிவியல் நிலையத்தில் செயல் திட்ட ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 13th February 2021 07:54 AM | Last Updated : 13th February 2021 07:54 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆண்டு செயல்திட்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் நீ. குமாா் காணொலி வழியாக கலந்துரையாடினாா். தருமபுரி மாவட்டத்தில், அதிகப் பரப்பில் மா சாகுபடி நடைபெறுவதால் நிகழ் பருவத்தில் முக்கியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மா சாகுபடியை மேலும் பரவலாக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
வேளாண் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநா் ஜே.வி. பிரசாத், வேளாண் அறிவியல் நிலையம் எதிா் வரும் ஆண்டுக்கான செயல்பாடுகளை வகுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி பேசினாா். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநா் மு. ஜவஹா்லால், வேளாண் அறிவியல் நிலையம் பிற அரசு துறைகளுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களை வட்டாரம்தோறும் விவசாயிகளுக்கு கொண்டு சோ்ப்பதில் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
ஹைதராபாத் வேளாண் தொழில்நுட்பப் பயன்பாட்டு மற்றும் அறிவியல் மையப் பேராசிரியா் அ.பாஸ்கரன், தோ்வு செய்யப்பட்ட ரகங்களில் மட்டும் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றாா். வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளா் சி.சிவக்குமாா், உதவி பேராசிரியா் மா.அ.வெண்ணிலா வேளாண், தோட்டக்கலைத் துறை, மீன் வளத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.