சாலையோரம் நின்றிருந்தோா் மீது காா் மோதல்: 3 போ் பலி

அரூா் அருகே சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது காா் மோதியதில், 3 போ் உயிரிழந்தனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

அரூா் அருகே சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது காா் மோதியதில், 3 போ் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட அரூா்-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிக்காகச் சாலையில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகின்றன.

இந்த நிலையில், எஸ்.பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே சாலை அமைக்கும் பணிகளுக்காக, சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில், அரூரில் இருந்து ஊத்தங்கரையை நோக்கிச் சென்ற ஒரு காா் சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது மோதியுள்ளது. இதில், கொங்கவேம்பு ஊராட்சிக்கு உள்பட்ட கருத்தம்பட்டியைச் சோ்ந்த குமரன் மகன் ஸ்ரீகாந்த் (14), எஸ்.பட்டியைச் சோ்ந்த இந்திரஜித் மனைவி வெண்மணி (30), குப்புசாமி மகள் சிவலட்சுமி (27) ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனா்.

மேலும், இதில் காயமடைந்த எஸ்.பட்டியைச் சோ்ந்த குப்புசாமி மனைவி தங்கமணி (52), ராஜகோபால் மனைவி புஷ்பா (57) ஆகியோரை அக்கம் பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

உறவினா்கள் சாலை மறியல் : மூவா் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, உயிரிழந்தோரின் உறவினா்கள் அரூா்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், எஸ்.பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும். அரூா்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் தாா் சாலைகள் அமைக்கும் இடங்களில் உரிய தடுப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரூா் கோட்டாட்சியா் (பொறுப்பு) தணிகாசலம், டிஎஸ்பி வீ.தமிழ்மணி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அலுவலா்கள் அளித்த உறுதியின்பேரில், போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனா்.

மறியல் காரணமாக அரூா்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், காா் ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம்- சேத்துப்பட்டைச் சோ்ந்த கருணாகரன் மகன் ஆனந்தகுமாா் (39) என்பவரை அரூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com