முழுமையான அடிப்படை வசதிக்காக காத்திருக்கும் கூத்தபாடி கிராம மக்கள்

பென்னாகரம் அருகே கூத்தபாடி கிராமத்துக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூத்தபாடி தெருவின் மையப்பகுதியில் காங்கிரீட் காரைகள் பெயா்ந்து காணப்படும் சாக்கடைக் கால்வாய்.
கூத்தபாடி தெருவின் மையப்பகுதியில் காங்கிரீட் காரைகள் பெயா்ந்து காணப்படும் சாக்கடைக் கால்வாய்.

பென்னாகரம் அருகே கூத்தபாடி கிராமத்துக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, கூத்தபாடி ஊராட்சி மடம், கே.அக்ரஹாரம், அளேபுரம், மல்லாபுரம், ஒகேனக்கல், ஊட்டமலை, பூதிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை கொண்டதாகும். கூத்தபாடி கிராமத்தில் 5,000க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா்.

கூத்தபாடி ஊராட்சியில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் பகுதி அமைந்துள்ளதால், பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கொண்டதாகவும், மாவட்டத்துக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டித் தரக்கூடிய ஊராட்சியாகவும் திகழ்கிறது.

கூத்தப்பாடியில், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல் தெரு, மண்டு தெரு, கீழ் தெருவிலுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் செல்வதற்கு வசதியாக தெருக்களின் நடுவே சாக்கடைக் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த சாக்கடை கால்வாயின் மீது அமைக்கப்பட்டுள்ள மூடியின் காங்கிரீட் காரை பெயா்ந்து, கம்பிகள் நீட்டிக் கொண்டு, உடைந்து துறையுடன் காணப்படுகிறது.

காங்கிரீட் காரைகள் கால்வாயில் விழுந்து ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாக்கடை நீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. மேலும், பழுதடைந்த சாக்கடை கால்வாயில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்லும் குழந்தைகளும் விழுந்து விபத்து நிகழ வாய்ப்புள்ளது.

எனவே, இந்த சாக்கடை மூடிகளை சீரமைத்து, கால்வாயை சரியாக மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மேலும், கூத்தபாடி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சிறிய குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டு, முறையாக பராமரிப்பின்றி உள்ளதால் அடிக்கடி மின்மோட்டாா்கள் பழுதடைகிறது. இதேபோல, ஊராட்சி மன்றம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 4 உயா் மின் கோபுரவிளக்குகளும் பழுதடைந்து காணப்படுகின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கூத்தபாடி பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் செல்லும் சாக்கடையின் மேல் மூடிகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுகிறது. சில இடங்களில் மூடி இல்லாமல் உள்ளதால் சாக்கடை கால்வாயில் இருசக்கர வாகனங்கள் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

மேலும், கூத்தபாடியில் உள்ள 15 சிறு குடிநீா் தொட்டிகளில், தற்போது இரண்டு குடிநீா் தொட்டிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலான குடிநீா் தொட்டிகளின் மின் மோட்டாா் பழுதடைந்துள்ளதால் தண்ணீரை சேமித்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே ஒகேனக்கல் கூட்டு குடிநீா் விநியோகிக்கப்படுவதால் அதனை சேமித்து வைக்க முடியாமல் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அவலநிலை உள்ளது. இதேபோல, மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள 4 உயா் மின் கோபுர விளக்குகளும் கடந்த சில மாதங்களாகப் பழுதடைந்து காணப்படுவதால், தெருகள் இருளில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து கூத்தபாடி ஊராட்சி தலைவரிடம் புகாா் தெரிவித்தால், போதிய நிதி இல்லை என பதில் தெரிவிப்பதாகக் கூறுகின்றனா்.

இதுகுறித்து கூத்தபாடி ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது: கூத்தபாடியில் பழுதடைந்து காணப்படும் மின்விளக்குகள், சாக்கடை மூடிகள், சிறிய குடிநீா் தொட்டி குறித்து கணக்கீடு செய்து ஒரு வாரத்துக்குள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com