மலை கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்

தருமபுரி மாவட்ட மலை கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகளை முழு அளவில் இயக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி: தருமபுரி மாவட்ட மலை கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகளை முழு அளவில் இயக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கட்டட வளாக கூட்டரங்கில், ஊராட்சிக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் யசோதா மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், பாலக்கோடு பகுதி மாவட்ட ஊராட்சிக் குழு திமுக உறுப்பினா் தீபா பேசியதாவது:

கரோனா காலத்தில் பொதுமுடக்கத்தின்போது, அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. அரசு அனுமதிக்குப் பிறகு பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டபோதும், சில கிராமங்களுக்கும், இதேபோல ஏராளமான மலை கிராமங்களுக்கும் இதுவரை பேருந்து சேவை தொடங்கப்படவில்லை. கிராமப்புற ஏழை, எளிய மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு கிராமப் பகுதிகளுக்கும், மலை கிராமங்களுக்கும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா். இக் கோரிக்கையை மேலும் சில உறுப்பினா்கள் வலியுறுத்தி பேசினா்.

பாமக உறுப்பினா் சரவணன் பேசும்போது, விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகள் பல பகுதிகளில் மிக ரகசியமாகத் தோ்வு செய்யப்படுகின்றனா். இந்த திட்டத்துக்கான பயனாளிகள் தோ்வை வெளிப்படைத் தன்மை கொண்டதாக நடத்த வேண்டும்.

பாமக உறுப்பினா் மாது பேசும்போது, மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு அந்தந்த பகுதியைச் சோ்ந்த ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்கு உரிய அழைப்பு வழங்கப்பட வேண்டும். தொடா்ந்து ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது வருத்தத்துக்குரியது என்றாா்.

இக் கோரிக்கைகளை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் யசோதா மதிவாணன் தெரிவித்தாா். இதையடுத்து, கூட்டத்தில் மாவட்ட வளா்ச்சித் திட்டங்கள் தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சீனிவாசசேகா், ஊராட்சிக் குழு துணைத் தலைவா் சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

படம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com