விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th January 2021 06:46 AM | Last Updated : 07th January 2021 06:46 AM | அ+அ அ- |

விண்ணப்பித்த அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜி.மாதையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், தருமபுரி மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கோரி, விண்ணப்பித்த அனைவருக்கும், குடியிருப்புகளை ஒதுக்கித்தர வேண்டும். கறவை மாடுகள், உழவு மாடுகள் வாங்க நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் வழங்க வேண்டும். தலித், பழங்குடியினா் குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீா், குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.