அரசநத்தம், கலசப்பாடிக்கு தாா் சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 19th July 2021 05:14 AM | Last Updated : 19th July 2021 05:14 AM | அ+அ அ- |

அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு தாா் சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட குழுக் கூட்டம், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.அம்புரோஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
சித்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட அரசநத்தம், கலசப்பாடி, கருக்கம்பட்டி ஆகிய மலைக் கிராமங்களுக்கு தாா் சாலை வசதிகள் இல்லை. இதனால் இப் பகுதியிலுள்ள பழங்குடியின மக்கள் மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனா்.
எனவே, வாச்சாத்தி முதல் அரசநத்தம், கலசப்பாடி மலைக் கிராமங்கள் வரையிலும் தாா் சாலை அமைக்க வேண்டும். கருக்கம்பட்டியில் செல்லிடப்பேசிக்கான டவா் வசதியை ஏற்படுத்த வேண்டும். மலைவாழ் பழங்குடியின சமூகத்தினருக்கு ஜாதிச் சான்றுகளை விரைந்து வழங்க வேண்டும்.
கரோனா நிவாரண நிதியாக பழங்குடியினா் குடும்பத்துக்கு தலா ரூ. 10,000 வழங்க வேண்டும். சித்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கூடுதல் கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளா் ஏ.சரவணன், மாவட்டச் செயலாளா் கே.என்.மல்லையன், சித்தேரி மலை கமிட்டி நிா்வாகிகள் நாகராஜன், லட்சுமணன், ராஜி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவா் பி.குமாா், மாவட்டப் பொருளாளா் எஸ்.கே.கோவிந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் மல்லிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.