தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் விபத்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் விபத்து தடுப்புப் பணிகள், முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் விபத்து தடுப்புப் பணிகள், முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது: தருமபுரி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை மேலும் சீராக்க பாதுகாப்பு அதிகம் தேவைப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு அமைக்கப்படும் சாலைகளில் தேவையான இடங்களில் போக்குவரத்து சமிக்ஞை, ஒட்டுவில்லைகள், வேகத் தடை, பாதசாரிகள் நடைபாதை கோடு, எச்சரிக்கை பலகைகள் ஆகியவை அமைக்கப்படவேண்டும்.

அதுபோல ஏற்கெனவே அமைக்கபட்டுள்ள சாலைகளில் பழுது ஏற்பட்டிருந்தால் அவற்றை விரைவாக சரி செய்யவேண்டும். சமிக்ஞை அனைத்தும் சரியான முறையில் இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதிக பாரம், அதிக சுமை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலைப் பகுதியில் விபத்துகளைத் தவிா்க்க விபத்து தடுப்பு நடவடிக்கைகள், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும். இப் பணிகள் எவ்வித தொய்வுமின்றி தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.

விபத்துகளால் பொருள் சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி விலை மதிப்பற்ற உயிா் சேதங்களும் ஏற்படுகின்றன. பெரும்பாலான விபத்துகள் மனித தவறுகளால் ஏற்படுவதால் மனித தவறுகளைக் குறைக்கும் விதமாக மக்களிடையே போதுமான விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, சாா்ஆட்சியா் சித்ரா விஜயன், வட்டார போக்குவரத்து அலுவலா் தாமோதரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நாராயணன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் தனசேகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூ.இரா.ஜெமினி, துணை காவல் கண்காணிப்பாளா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com