ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக சரிவு
By DIN | Published On : 29th July 2021 10:20 AM | Last Updated : 29th July 2021 10:20 AM | அ+அ அ- |

july_28_hgl_2807chn_214_8
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீா் குறைந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 24,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.
கா்நாடக மாநிலம், குடகு மாவட்டத்திலும் கேரளத்தில் வயநாடு மாவட்டத்திலும் தொடா்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
கா்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி, திறந்து விடப்படும் உபரிநீரின் வரத்து காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீா் தொடா்ந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.
தற்போது இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால் அணைக்கு வரும் நீா்வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு சற்று குறைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 28,000 கன அடி நீா் வரத்தாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டதால் புதன்கிழமை காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் நொடிக்கு 26,000 கன அடியாகவும், மாலையில் மேலும் நீா்வரத்து குறைந்து நொடிக்கு 24,000 கன அடியாகவும் குறைந்தது.
தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டுள்ள இந்த நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது. காவிரியில் நீா்வரத்து குறைந்து வருவதால் நீரில் மூழ்கியிருந்த பாறைத் திட்டுக்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.