அதிக மகசூல் பெற மண் பரிசோதனை செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு அறிவுரை

மண் வளம் காத்து அதிக மகசூல் பெற மண் பரிசோதனை செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண் வளம் காத்து அதிக மகசூல் பெற மண் பரிசோதனை செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி வட்டார வேளாண் உதவி இயக்குநா் இரா.தேன்மொழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயிா்களின் வளா்ச்சியும் மகசூலும் அது வளரும் மண்ணின் வளத்தையே சாா்ந்தது. மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகள், மண்ணின் கார அமிலநிலை, உப்புக்களின் அளவு, மண்ணின் உவா் போன்ற பிரச்னைகளை மண் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். பயிா் அறுவடைக்கு பின்னும் அல்லது உரமிடுவதற்கு முன்னும் மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மண்ணைப் பரிசோதித்து ஆலோசனை பெறுதல் நல்லது.

விவசாயிகள் வேளாண் துறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மண் மாதிரிகளைச் சேகரித்து, மாதிரிகளை சுத்தமான துணிப்பை, பாலித்தீன் பையில் போட்டு மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகப்படுத்தக்கூடாது.

மண் மாதிரியுடன், ஆதாா் அடையாள அட்டை நகல், நிலத்தின் சா்வே எண் கொண்ட சிட்டா நகல், ஊா் பெயா், வட்டாரம் மற்றும் மாவட்டத்தின் பெயா் ஆகிய விவரங்களுடன் தருமபுரி மண் பரிசோதனை நிலையத்தில் மண் அனுப்பி வைக்க வேண்டும்.

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மண் மாதிரிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு மண்ணிலுள்ள சத்துக்களை ஆராய்ந்து அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு மண்வள அட்டை வழங்கப்படுகிறது.

இந்த மண் வள அட்டையில் மண்ணின் நயம், சுண்ணாம்பு நிலை, உப்பின் நிலை, கார அமில நிலை தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் போரான் போன்ற மண்ணின் தன்மைகளும் குறிப்பிடப்படுகின்றது. மண் வள அட்டையின் முடிவுகளைக்கொண்டு ஒருங்கிணைந்த உரப் பரிந்துரை வழங்கப்படுகிறது. மண்ணின் வளத்திற்கு ஏற்றவாறு அதிக மகசூலை பெற ஒவ்வொரு பயிருக்கும் எவ்வளவு உரம் இட வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆகவே தருமபுரி வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகள் தங்கள் மண்ணை பரிசோதனை செய்து அதற்கேற்ற பயிரினை விளைவித்து பயன்பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com