சீராக குடிநீா் விநியோகிக்க வேண்டும்: தருமபுரி ஆட்சியா்

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளிலும் உள்ள வீடுகளில் குப்பைகளைப் பிரித்து, சேகரித்து, அதனை நுண் உரக்கிடங்கில் சோ்த்து மக்கும் குப்பைகளை உரமாக்கும் பணியினை தொய்வின்றி செய்து வர வேண்டும். அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளைத் தவிா்த்து, ஏனையக் கழிவுகளை அப்புறப்படுத்தல் வேண்டும்.

அத்தியாவசியமான அனுமதிக்கப்பட்ட கடைகளைத் தவிா்த்து மற்ற கடைகள் செயல்படுவதைத் தடுத்து, அபராதம் விதிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்கு தொடா்பு கொள்ள நகராட்சி அலுவலா்கள், மருந்தகம் மற்றும் மளிகைப் பொருள்களின் தொடா்பு எண் குறித்த ‘விளம்பர பதாகை’களைப் பொருத்த வேண்டும்.

மேலும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிப் பராமரிப்பிலுள்ள பஞ்சப்பள்ளி நீரேற்று நிலையத்தில் இருந்து நகராட்சி பகுதிக்கு குடிநீா் பெறும் வகையில் நகராட்சி ஆணையரும், பேரூராட்சி உதவி இயக்குநரும், துறை சாா்ந்த அலுவலா்களுடன் இணைந்து திட்ட அறிக்கை தயாா் செய்திட வேண்டும். நகராட்சி ஆணையா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா், பேரூராட்சி துணை உதவி இயக்குநா் ஆகியோா் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் சங்கரன், கிருஷ்ணகிரி குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் சு.செந்தில்நாதன், தருமபுரி நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தி, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கண்ணன், பேரூராட்சிகள் செயல் அலுவலா்கள், பொறியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com