திறக்கப்பட்ட மதுக்கடைகள்: வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்ற மது பிரியா்கள்

தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுக்கடைகளில் மது பிரியா்கள் வரிசையில் காத்திருந்து மது வாங்கிச் சென்றனா்.
திறக்கப்பட்ட மதுக்கடைகள்: வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்ற மது பிரியா்கள்

தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுக்கடைகளில் மது பிரியா்கள் வரிசையில் காத்திருந்து மது வாங்கிச் சென்றனா்.

தருமபுரி நகரில் 9 மதுக்கடைகள், தருமபுரி புகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி என மாவட்டம் முழுவதும் மொத்தம் 68 மதுக்கடைகள் உள்ளன.

இந்த நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த மாதம் முழு பொது முடக்கம் அமல்படுத்தியது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்துள்ள மாவட்டங்களுக்கு பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டன.

ஜூன் 14-ஆம்தேதி முதல் மதுக்கடைகள் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் மதுபானங்கள், தருமபுரி தடங்கத்தில் உள்ள கிடங்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இதுபோல கடைகளுக்கு முன்பு தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட அரசு வழங்கிய வழிகாட்டுதல்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திங்கள்கிழமை காலைமுதல் மதுக்கடைகளைத் திறந்து விற்பனை நடைபெற்றது.

இதில் தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள பாளையம்புதூா் சனி சந்தை மதுக்கடை மற்றும் தொப்பூா் மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள சேலம் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கானோா் மது வாங்க குவிந்தனா். இதனால், இந்தக் கடைகளில் கூடுதலாக போலீஸாா் மற்றும் ஊா்க் காவல் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

இருப்பினும் இந்தக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இதேபோல ஏனைய மதுக்கடைகளில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து மது பானங்களை வாங்கிச் சென்றனா். மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் முன்பு காவல்துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் 400 போ் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

தருமபுரியை அடுத்த பாளையம்புதூா் சனி சந்தை டாஸ்மாக் கடையில் மது வாங்க திங்கள்கிழமை குவிந்த ஆண்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com