புதிய தளா்வுகள்: தேநீா், சிகைத் திருத்தும் கடைகள் திறப்பு
By DIN | Published On : 15th June 2021 08:54 AM | Last Updated : 15th June 2021 08:54 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கத்தில் புதிய தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் தேநீா், சிகைத் திருத்தும் கடைகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. படிப்படியாக தொற்று பரவல் பல மாவட்டங்களில் குறைந்து வந்ததால் தொற்று பரவல் குறைந்து வரும் மாவட்டங்களில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஜூன் 14- ஆம் தேதி முதல் புதிதாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது.
இப் புதிய தளா்வுகளையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தேநீா்க் கடைகள், சிகைத் திருத்தும் கடைகள், வேளாண் பொருள்கள் பழுது நீக்கும் கடைகள் திறக்கப்பட்டன.
இதில் தேநீா்க் கடைகளில் பாா்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதேபோல சிகை அலங்கார கடைகளில் குளிா்சாதன வசதி இன்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் தளா்வுகளால் தருமபுரி நகரில் நேதாஜி புறவழிச் சாலை, பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகள், கடை வீதி ஆகிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டன. பத்திரப் பதிவு அலுவலகங்களில் காலைமுதலே மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பத்திரப் பதிவு செய்ய வந்தவா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் நடைபெற்றன.