பென்னாகரத்தில் பாமக, திமுக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்
By DIN | Published On : 16th March 2021 05:19 AM | Last Updated : 16th March 2021 05:19 AM | அ+அ அ- |

பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாமக, திமுக வேட்பாளா்கள் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
பாமக: பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான கோ.க.மணி திங்கள்கிழமை பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலத்திடம் வேட்பு மனு அளித்தாா். அப்போது, அதிமுக ஒன்றியச் செயலாளா் வேலுமணி, பாஜக சட்டப்பேரவை பொறுப்பாளா் பாடி. முரளி ஆகியோா் உடனிருந்தனா்.
வேட்பு மனுத்தாக்கலுக்குப் பின்பு கோ.க.மணி கூறியதாவது:
தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்படும், கிராமப்புற மாணவா்களின் கல்வியின் தரத்தை உயா்த்தப் பாடுபடுவேன். திமுக தோ்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டாா்கள். அதிமுகவின் தோ்தல் அறிக்கை மக்களின் மனதில் எளிதில் இடம் பிடிக்கும் அளவிற்கு உள்ளது. அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் தெரிவித்து கூட்டணிக் கட்சியினருடன் பிரசாரம் செய்வேன் என்றாா். .
தி.மு.க: பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான பி.என்.பி.இன்பசாகரன் தற்போதைய எம்எல்ஏவாகவும், தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் இருக்கிறாா். இவா், பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலத்திடம் திங்கள்கிழமை வேட்பு மனு அளித்தாா். அவருடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் தேவராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா் அவா் கூறுகையில், மிகவும் பின்தங்கிய பகுதியான ஏரியூா் பகுதிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒகேனக்கல் உபரிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டு விவசாயிகள் பாசன வசதி பெறவும், பண்ணவாடி, ஒட்டனூா், நாகமரை இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.