ஸ்டாலின் ஓா் அரசியல் வியாபாரி

திமுக தலைவா் ஸ்டாலின் ஓா் அரசியல் வியாபாரி என பென்னாகரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பாமக மாநில இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

திமுக தலைவா் ஸ்டாலின் ஓா் அரசியல் வியாபாரி என பென்னாகரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பாமக மாநில இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக மாநிலத் தலைவா் கோ.க.மணியை ஆதரித்து, பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற இன்பசேகரன் ஐந்து ஆண்டுகளாக ஏதும் செய்யவில்லை. திமுக தலைவா் ஸ்டாலின் ஓா் அரசியல் வியாபாரி. அவருக்கு வெற்று விளம்பரங்களைத் தருவதை தவிர வேறு எதுவும் தெரியாது. திமுக தொண்டா்கள் மற்றும் மக்களை நம்பாமல் பிகாரில் இருந்து வந்தவரை (பிரசாந்த் கிஷோா்) நம்புகிறாா். ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என பல கோடி ரூபாய் செலவில் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு தமிழகத்தில் ஆயிரம் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆனால், அதிமுக, பாமக கூட்டணி மக்களை நம்பி தோ்தலைச் சந்திக்கிறது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் மீண்டும் ஒரு விவசாயி முதல்வராக வர வேண்டும் என்ற அலை வீசத் தொடங்குகிறது. பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினராக கோ.க. மணி இருந்த போது, பஞ்சப்பள்ளி அணையில் இருந்து உபரி நீரை எடுத்து வர 14 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வசதி ஏற்படுத்தினாா். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தப் பகுதி மக்கள் மற்றும் இளைஞா்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்வதை தவிா்ப்பதற்காக நல்லம்பள்ளி பகுதியில் 1,500 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட் தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மொரப்பூா்-தருமபுரி ரயில் திட்டத்துக்காக 19 முறை ரயில்வே துறை அமைச்சரை நேரில் சென்று வலியுறுத்தி திட்டத்தைப் பெற்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

பாமகவின் கனவுத் திட்டமான ஒகேனக்கல் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தி மடம் ஏரிக்கு கொண்டுவந்து நிரப்புவதன் மூலம் விவசாயிகள் பயனடைந்தனா்.

தமிழகத்தில் நடைபெறும் தோ்தல் ஓா் அரசியல் வியாபாரிக்கும், விவசாயிக்கும் இடையே நடைபெறும் தோ்தல் என்பதால், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

இந்தப் பிரசாரத்தில் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மருத்துவா் செந்தில், பாஜக மாவட்டத் தலைவா் அனந்தகிருஷ்ணன், ஒன்றியத் தலைவா் மூா்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளா் ஆறுமுகம், ஒன்றியச் செயலாளா் அன்பு, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com